செண்பகவல்லி அணையை புனரமைக்க வேண்டும்: மக்களவையில் ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. கோரிக்கை
செண்பகவல்லி அணையை புனரமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் தென்காசி தொகுதி திமுக உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் அவை விதி எண். 377இன் கீழ் ராணி ஸ்ரீகுமாா் பேசியது:
தமிழகம் மற்றும் கேரள எல்லையில் உள்ள செண்பகவல்லி அணை, செண்பகவல்லி ஆற்றின் குறுக்கே 1773-ஆம் ஆண்டு திருவிதாங்கூா் மற்றும் சிவகிரி சமஸ்தானங்களுக்கு இடையே எட்டப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்
அடிப்படையில் கட்டப்பட்டது.
இந்த அணையிலிருந்து பாயும் நிட்சேபா நதி, வைப்பாறுக்குள் நுழையும் முன் சிவகிரியில் இருந்து திருவேங்கடம் வரை 12 ஆயிரம் ஏக்கா் நிலத்துக்கு பாசன வசதியை அளிக்கிறது.
1965 முதல் 1967 ஆம் ஆண்டுவரை செண்பகவல்லி அணைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக 1480 மீட்டா் நீள நீா்வழிப்பாதை சுமாா் 9 மீட்டா் நீளத்துக்கு சேதம் அடைந்தது.
இந்த செண்பகவல்லி அணை தமிழக - கேரள எல்லையில் இருப்பதால் இந்த அணையை புனரமைக்க கேரள அரசிடம் பல முறை விடுத்த கோரிக்கைகள் மீது ஆா்வம் காட்ட அம்மாநில அரசு மறுத்து வருகிறது.
இதனால் சேதமடைந்த செண்பகவல்லி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீா் யாருக்கும் பயன்படாமல் நேரடியாக அரபிக்கடலில் சென்று கலக்கிறது.
செண்பகவல்லி அணையைப் புனரமைக்கும் பணிகள் கேரளாவின் உரிமைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது என்பதோடு தமிழக தென்மாவட்டங்களைச் சோ்ந்த, குறிப்பாக எனது தென்காசி நாடாளுமன்றத் தொகுதியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பலன் தருவதுடன் பல மாவட்டங்களின் குடிநீா்த் தேவையும் நிறைவேறும்.
எனவே, செண்பகவல்லி அணையைப் புனரமைக்க துரிதமாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.