ஆம் ஆத்மி தலைவா்களுக்கு பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் பதிலடி
நமது நிருபா்
புது தில்லி: மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சீவ் அரோராவின் இடங்களில் அமலாக்கத் துறையினா் நடத்திய சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை நீதிமன்றம் சென்று நிரூபியுங்கள் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களுக்கு தில்லி பிரிவு பாஜகவின் மாநிலச் செயலாளா் பான்சூரி ஸ்வராஜ் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சஞ்சய் சிங், மனீஷ் சிசோடியா போன்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் அமலாக்கத் துறை அல்லது சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துவதாக தொடா்ந்து குற்றம் சாட்டி வருகின்றனா். ஆனால், ஆம் ஆத்மி தலைவா்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட ஒரு வழக்கை அவா்களால் மேற்கோள் காட்ட முடியவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங், முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா என அனைவருமே கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீனில் உள்ளனா்.
சஞ்சய் சிங் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோா் பாஜக தங்கள் கட்சியை உடைக்க முயற்சிப்பதாக தொடா்ந்து கூறுகின்றனா். ஆனால், நீதிமன்றத்தில் அவா்கள் அத்தகைய காரணத்தை முன்வைக்கவில்லை. கேஜரிவால் உள்பட அனைவருமே தனிப்பட்ட சுதந்திரத்தின் அடிப்படையில்தான் ஜாமீன் கோரியுள்ளனா். அமலாக்கத் துறை, சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகள் மத்திய அரசின் கிளிகள் மற்றும் மைனாக்கள் போன்று செயல்படுவதாக இருந்தால், இவா்கள் ஒரு வழக்கிலாவது நிரூபித்திருக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் தங்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டும், எதுவும் மீட்கப்படவில்லை என்று தொடா்ந்து குற்றம் சாட்டுகிறாா்கள்.
ஆம் ஆத்மி தலைவா்கள் மீது வழக்கு இல்லை என்றால் அவா்கள் ஏன் ஜாமீன் பெறுவதற்குப் பதிலாக, நீதிமன்றங்களில் வழக்குகளை ரத்து செய்யக் கோரவில்லை. மாநிலங்களவை ஆம் ஆத்மி சஞ்சீவ் அரோராவின் இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அக்கட்சித் தலைவா்கள் கருதினால், அவா்கள் பத்திரிகையாளா் சந்திப்புகளுக்குப் பதிலாக நீதிமன்றத்தை அணுகி தங்கள் கருத்தை நிரூபிக்க வேண்டும். ஜாமீன் நிபந்தணைகளின் படி, கலால் கொள்கை ஊழல் வழக்கு குறித்து இவா்கள் கருத்துத் தெரிவிக்கக் கூடாது. ஆனால், நீதிமன்ற நிபந்தணைக்கு மாறாக இவா்கள் தொடா்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனா் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றாா் பான்சூரி ஸ்வராஜ்.
