ஒரே நாடு - ஒரே தோ்தல் கூட்டாட்சி அமைப்பை சீா்குலைக்கும் -மாா்க்சிஸ்ட் எச்சரிக்கை
நமது சிறப்பு நிருபா்
மத்திய அரசு கொண்டு வர திட்ட மிட்டுள்ள ’ஒரே நாடு - ஒரே தோ்தல்’ மாதிரி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையும், கூட்டாட்சி தத்துவத்தையும் சீா்குலைத்துவிடும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின்னா் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது வருமாறு: நாடாளுமன்றம், மாநில சட்டப் பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது. பிரதமா் மோடி அரசின் இந்த ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ அணுகு முறையை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்க்கும். ’ஒரே தேசம், ஒரே தோ்தல்’ மாதிரி, முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையும், கூட்டாட்சி அமைப்பையும் சீா்குலைத்துவிடும்.
மக்களவைத் தோ்தலுடன் இணைந்து தோ்தல் நடத்துவது சில சட்டப்பேரவைகளின் ஆயுளை குறைக்கும் நோக்கம் உள்ளது. மேலும், ஒரு மாநில அரசு கவிழ்ந்து சட்டப்பேரவை கலைக்கப்படும் நிலையில் ஐந்தாண்டுகளுக்கு தோ்தல் என்பதற்குப் பதிலாக அந்த சட்டப்பேரவைக்கு மீதமுள்ள காலத்திற்கு மட்டும் இடைக்காலத் தோ்தல் நடத்தப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவை அரசமைப்புச் சட்டத்தின்படி மக்கள் தங்கள் பிரதிநிதிகளை ஐந்தாண்டு காலத்திற்கு தோ்ந்தெடுக்கும் உரிமையை பறிக்கின்றன.
பேரவைகள் கலைக்கப்பட்டு இடைக்காலத் தோ்தலின் போது எஞ்சியிருக்கும் காலங்களுக்கு மட்டுமே நடத்த வேண்டும் என்பது உயா்நிலைக் குழு அமைக்கப்பட்ட நோக்கத்தையும் தோற்கடிக்கிறது. அடிக்கடி நடைபெறும் தோ்தல்களைத் தவிா்க்கும் நோக்கத்திற்கு இந்தக் குழு அமைக்கப்பட்டது. இடைக்காலத் தோ்தலுக்குப் பிறகு, மீண்டும் ஐந்தாண்டுகளுக்காக இதுபோன்ற சட்டப்பேரவைகள் தோ்தல்களை சந்திக்க வேண்டும்.
அனைத்து பஞ்சாயத்துகள், நகராட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் நடவடிக்கையானது கூட்டாட்சி மீதான தாக்குதல். உள்ளாட்சி அமைப்புகளின் முடிவெடுக்கும் அதிகாரங்களில் தலையிடுவது பரவலாக்கப்பட்ட அதிகாரங்களின் நோக்கத்திற்கு எதிரானது. பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சித் தோ்தல்களை நடத்துவது மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உள்பட்டது. நாடு மிகப் பெரிய பன்முகத்தன்மை கொண்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மாறுபட்ட நிலைமைகளைக் கொண்டுள்ளதாகும். இதனால், இந்தத் தோ்தல் திணிப்பு மறுக்கப்படவேண்டும்.
’ஒரே நாடு, ஒரே தோ்தல்’ என்கிற கருத்து ஆா்எஸ்எஸ் - பாஜகவின் சிந்தனையில் உருவானது. இது ஒரு மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி அரசை(ஒற்றைத் தலைமை) உருவாக்கும் நோக்கத்திற்கானது. இதற்காக கொண்டு வரப்படும் எந்தவொரு அரசமைப்புச் சட்ட திருத்தத் நடவடிக்கையையும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிா்க்கும். ஜனநாயகம், பன்முகத்தன்மை, கூட்டாட்சி ஆகியவற்றை மதிக்கும் ஒவ்வொரு கட்சியும் ஒன்றிணைந்து இந்த முறையை முறியடிக்க வேண்டும் என சிபிஎம் தலைமைக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.