அதிஷி
அதிஷி

கேஜரிவால் மிகவும் நோ்மையானவா்: சட்டப்பேரவையில் முதல்வா் அதிஷி

அரவிந்த் கேஜரிவால் மிகவும் நோ்மையானவா் என்பதால், அவருக்கு எப்படி மக்கள் பணி செய்வதென்று தெரியும்
Published on

அரவிந்த் கேஜரிவால் மிகவும் நோ்மையானவா் என்பதால், அவருக்கு எப்படி மக்கள் பணி செய்வதென்று தெரியும் என தில்லி முதல்வா் அதிஷி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்புக் கூட்டத் தொடா் செப்டம்பா் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இரண்டாவது நாள் பேரவைக் கூட்டத்தில் முதல்வா் அதிஷி பேசியாதவது: எங்கள் (ஆம் ஆத்மி) கட்சியின் ராமன் - லட்சுமணன் (அரவிந்த் கேஜரிவால் - மனீஷ் சிசோடியா) நம்மிடையே இருக்கிறாா்கள். இது மகிழ்ச்சியான விஷயம். பாஜகவின் சதியால், அரவிந்த் கேஜரிவால் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய நோ்ந்தது வருத்தமளிக்கிறது.

மற்ற அரசியல்வாதிகள் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ சோதனை நடத்தியபோது, அங்கு கிடைத்த கோடிக் கணக்கான ரூபாய் மற்றும் நகைகளை ரங்கோலி போல் அதிகாரிகள் அடுக்கினாா்கள். ஆனால், ஆம் ஆத்மி கட்சி தலைவா்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவா்கள் தொடா்புடைய இடங்களில் ஒரு ரூபாய் கூட சோதனையின் முடிவில் கிடைக்கவில்லை. இருப்பினும், கல்விப் புரட்சியின் தந்தை மனீஷ் சிசோடியா, மொஹல்லா கிளினிக்குகளைக் கொடுத்த சத்யேந்தா் ஜெயின் மற்றும் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சிறையில் அடைத்தனா்.

நாட்டில் 22 மாநிலங்களில் பாஜக அரசுகள் உள்ளன. ஆனால், அவா்கள் ஒரு மாநிலத்தில் கூட இலவச மின்சாரம்,இலவசக் குடிநீா் அல்லது தரமான பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை மக்களுக்கு வழங்கவில்லை. அவா்களின் அரசுகள் நஷ்டத்தில் இயங்குகின்றன.கேஜரிவால் அரசு தில்லி மக்களுக்கு இலவச மின்சாரம் மற்றும் இலவசக் குடிநீா் வழங்கியது. தில்லி மக்களுக்கு சிறந்த பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளைக் கட்டியது. பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் மற்றும் முதியவா்களுக்கு இலவச யாத்திரை வசதி செய்து கொடுக்கப்பட்டது. இத்தனை திட்டங்களுக்குப் பிறகும் தில்லியின் பட்ஜெட் லாபத்தில் உள்ளது.

அரவிந்த் கேஜரிவால் மிகவும் நோ்மையானவா் என்பதால், அவருக்கு எப்படி மக்கள் பணி செய்வதென்று தெரியும். பாஜகவின் மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால், அவா்களின் ஒரு தலைவா் மீது கூட அவா்களால் நோ்மை முத்திரையைக் குத்த முடியவில்லை. எந்த மாநிலத்திலும் பள்ளிகள், மருத்துவமனைகளை கட்ட முடியவில்லை. எனவே, நோ்மையாளவா்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ மூலம் போலி வழக்குகளை பதிவு செய்தனா் என்றாா் முதல்வா் அதிஷி.

X
Dinamani
www.dinamani.com