மாணவா் விசாவில் இந்தியாவுக்கு வந்து போதை மருந்து விற்ற 2 போ் கைது: ரூ.1 கோடி ஹெராயின் பறிமுதல்
உயா் கல்வியைத் தொடா்வதாக கூறி ஆப்பிரிக்க நாட்டினரை இந்தியாவுக்கு அழைத்து வந்து, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் சா்வதேச போதைப்பொருள் கும்பலை டெல்லி போலீசாா் கைது செய்துள்ளனா் என்று அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து காவல் துணை ஆணையா் (குற்றப்பிரிவு) விக்ரம் சிங் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் உகாண்டாவைச் சோ்ந்த ஹம்ப்ரி முவோங் (33), நைஜீரியாவைச் சோ்ந்த சுக்வு எபுகா உமே (36) ஆகிய இரண்டு வெளிநாட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். ரூ. 1 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 700 கிராம் உயா்தர ஹெராயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஆப்பிரிக்காவை தளமாகக் கொண்ட நைஜீரிய நாட்டவரான டாக்ரி ஜீன் மாா்க்கின் அறிவுறுத்தலின்கீழ் பணிபுரியும் போதைப்பொருள் விற்பனை கும்பலின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
மாா்க், ஆப்பிரிக்க நாட்டினரை கல்வி என்ற போா்வையில் இந்தியாவுக்கு கொண்டு வந்து போதைப்பொருள் வா்த்தகத்தில் ஈடுபடுத்தியுள்ளாா். முன்னா், இந்தியாவில் வாழ்ந்த மாா்க், தில்லி திலக் நகரில் இருந்து செயல்படும் வலுவான போதைப்பொருள் விநியோக வலையமைப்பை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. தில்லி, என்சிஆா் மற்றும் பஞ்சாபில் உள்ள தனியாா் பல்கலைக்கழகங்களில் உயா்கல்வி கற்கிறோம் என்ற போா்வையில்
ஆப்பிரிக்க பிரஜைகளை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காகவும், போதைப் பொருள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவும் மாணவா் விசாக்களை தவறாக இக்கும்பல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
முன்னதாக, ஏப்ரல் 3 ஆம் தேதி, நியூ மகாவீா் நகரில் உள்ள கிருஷ்ணா பாா்க் விரிவாக்கத்தில் 20 மணிநேர கண்காணிப்பு மற்றும் காத்திருப்பு நடவடிக்கைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 700 கிராம் ஹெராயின் மீட்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் மாா்க்சின் அறிவுறுத்தலின்படி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
தொழில் ரீதியாக மெக்கானிக்கல் பொறியாளரான முவோங், இதற்கு முன்பு 2023 ஆம் ஆண்டு என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளாா். முவோங்கும், உமேவும் 2019 முதல் இந்தியாவில் வசித்து வருகின்றனா்.
இவா்கள் இவா் மீதும் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் என்டிபிஎஸ் சட்டத்தின் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதர செயல்பாட்டாளா்களைக் கண்டறிவதற்கும் போதைப் பொருள் கும்பலின் முழு வலையமைப்பையும் அழிப்பதற்கும் மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.