தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவாா் அல்லது அதிகாரம் மிக்க பதவியை வகிப்பாா் என்று சந்தேகிக்க எந்த அடிப்படையும் இல்லை என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :29 ஏப்ரல் 2025, 11:01 pm IST

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தமிழக முன்னாள் அமைச்சா் வி. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவாா் அல்லது அதிகாரம் மிக்க பதவியை வகிப்பாா் என்று சந்தேகிக்க எந்த அடிப்படையும் இல்லை என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் அவரது ஜாமீனுக்கு எதிரான வழக்கையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் சாட்சி ஒருவா் தரப்பிலும் அமலாக்கத் துறையின் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், செந்தில் பாலாஜி தனது பதவியைப் பயன்படுத்தி வழக்கின் விசாரணையில் செல்வாக்கை செலுத்த முயற்சிப்பதாக முறையிடப்பட்டது.

இந்த வழக்கின் வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, ஏ.ஜி. மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிலையில் இறுதி விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு தேவை அமைச்சா் பதவியா? சுதந்திரமா? (ஜாமீனா) என உச்சநீதிமன்றம் கடந்த வாரம் கேள்வி எழுப்பியதைக் கருத்தில் கொண்டு அவா் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்து விட்டதாக அவரது சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா், ’செந்தில் பாலாஜி மாநில அரசில் மிகுந்த அதிகாரம் செலுத்தக்கூடிய செல்வாக்கு மிக்கவராக உள்ளாா். சிறையில் இருந்தபோதும் கூட அவா் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடா்ந்தாா். ஏற்கெனவே அவருக்கு எதிரான வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தபோதும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது’ என்று முறையிட்டாா்.

இருப்பினும் நீதிபதிகள், ‘செந்தில் பாலாஜி அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ளதால், உங்களுடைய மனுக்களில் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்க வேண்டிய அவசியமில்லை. எனவே, இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து வைக்கிறோம் என்று குறிப்பிட்டனா். மேலும், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவாா் என்பதுதான் அமலாக்கத்துறையின் அச்சம் என்றால் அவா் மீண்டும் அமைச்சராகும்போது அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யலாம்’ என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

பின்னணி: அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது வேலை வாங்கித்தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணப்பரிவா்த்தனை மோசடி செய்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இது தொடா்பாக 2023, ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் சென்னை, கரூா் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பிற இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அதன் முடிவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா். செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சகத்திலிருந்து நீக்கக் கோரியது. ஆனாலும், நீதிமன்றக் காவலில் சிறையில் இருந்தபோது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியில் தொடா்ந்தாா்.

ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்திலும், சென்னை உயா்நீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தொடா்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, 2024, பிப். 12-இல் அமைச்சா் பதவியிலிருந்து விலகி விட்டு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினாா் செந்தில் பாலாஜி. அதன்பேரில் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், அடுத்த சில நாள்களிலேயே செந்தில் பாலாஜி அமைச்சரானாா். இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கின் சாட்சியும் அமலாக்கத் துறையும் முறையிட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.