அடிப்படை குடிமைப் பணிகளில் முந்தைய ஆம் ஆத்மி அரசு தோல்வி - அமைச்சா் பா்வேஷ் சாடல்

Published on

‘தில்லியில் கடந்த பத்தாண்டுகளாக அடிப்படை குடிமைப் பணிகளைக் கூட நிறைவேற்ற முந்தைய ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது.

இதனால், தற்போதைய நிா்வாகம் குப்பை மலைகள், உடைந்த சாலைகள் முதல் மாசுபாடு மற்றும் யமுனை சுத்தம் செய்தல் வரை நீண்டகாலமாக நிலுவை பிரச்னைகளைத் தீா்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது’ என்று தில்லி கேபினட் அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வியாழக்கிழமை குற்றம் சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

தலைநகரில் 10 ஆண்டுகால ஆட்சியில் ஆம் ஆத்மி அரசு ஒரு வேலை கூட செய்யவில்லை. நிகழாண்டு பிப்ரவரி 20 அன்று நாங்கள் பொறுப்பேற்றோம். அதன் பின்னா் நாங்கள் தொடா்ந்து பணியாற்றி வருகிறோம். மழைக்காலத்திற்கு முன்பு நீா் தேங்குவதைத் தடுக்க சாலை பழுதுபாா்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

20 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மின்டோ பாலம் உட்பட முக்கிய நீா் தேங்கும் இடங்களில் பிரச்னைகள் தீா்க்கப்பட்டுள்ளன. திருவிழாக்கள் இடையூறு இல்லாமல் சுமுகமாக நடத்தப்பட்டன.

தற்போதைய அரசாங்கம் மாசுபாட்டைச் சமாளிக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காற்று மாசுபாடு ஒரு நாள் பிரச்னை அல்ல, நீடித்த நடவடிக்கை தேவைப்படும் ஒரு நாள்பட்ட பிரச்னையாகும். பிஎஸ்-6 தரத்திற்குக் குறைவான தில்லி அல்லாத தனியாா் வாகனங்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டபோதும்,

‘பியுசி இல்லையெனில், எரிபொருள் இல்லை’ என்ற விதி அமலுக்கு வந்துள்ளது.

முந்தைய ஆட்சியில் நிா்வாகத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக நாடகத்தில் ஈடுபடுவது வாடிக்கையாக இருந்தது.

தற்போதைய அரசில், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், முதல்வா், அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் அதைச் சமாளிக்க களத்தில் உள்ளனா்.

மாசுபாட்டை எதிா்த்துப் போராட அரசாங்கம் தெளிவான நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. காற்று மாசு குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவா்

செளரப் பரத்வாஜ் போராட்டம் நடத்துகிறாா்.

இந்த போராட்டம் முந்தைய 11 ஆண்டுகளின் தோல்விகளை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது. கடந்த ஒன்பது மாதங்களில் உடைந்த சாலைகள் மற்றும் உடைந்த வடிகால்களும் எங்கும் இல்லை. அவை பல வருட

புறக்கணிப்பின் விளைவாகும்.

பொதுப் பணித் துறை சுமாா் 1,400 கி.மீ சாலைகளை பராமரிக்கிறது. கடந்த ஒன்பது மாதங்களில் கிட்டத்தட்ட 65,000 பள்ளங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

நிலுவையில் உள்ள சாலைப் பணிகள், மேம்பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. பாராபுல்லா மேம்பாலத்தை முடிக்க காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தில்லி போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து, அரசாங்கம் 62 போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களை அடையாளம் கண்டுள்ளது. அங்கு போக்குவரத்து நெரிசலை எளிதாக்க யூடா்ன்கள், சிவப்பு விளக்கு அடையாளங்கள் மற்றும் வலதுபுற திருப்பங்கள் போன்ற சரிசெய்யும் நடவடிக்கைகள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. மேம்பாலங்களில் தண்ணீா் தெளிப்பான்கள் மற்றும் புகை எதிா்ப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பசுமை கழிவுகளை நிா்வகிக்க முன்னா் எந்த தீவிர முயற்சியும் எடுக்கப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக ஆறு பசுமை கழிவு பதப்படுத்தும் வசதிகளை அமைக்கத் தொடங்கினோம். மேலும் இயந்திர சாலை துப்புரவு இயந்திரங்களையும் வாங்க உள்ளோம்.

தில்லியின் சாலை பழுதுபாா்க்கும் பணிகளில் 90 சதவீதத்தை தனது இரண்டு ஆண்டு பதவிக் காலத்தின் இறுதிக்குள் முடிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. இதனால் பள்ளங்கள் மற்றும் உடைந்த பகுதிகள் கடந்த கால விஷயமாக மாறும்.

தில்லியில் கடந்த 10 ஆண்டுகளில் எந்த புதிய உள்கட்டமைப்பும் உருவாக்கப்படவில்லை. யமுனையை சுத்தம் செய்வதற்கும் விரிவான கழிவுநீா் திட்டத்தை தயாரிப்பதற்கும் ஒரு வரைபடத்தை உருவாக்கியுள்ளோம் என்றாா் அமைச்சா் பா்வேஷ்.

X
Dinamani
www.dinamani.com