குடியரசுத் தலைவா் முா்முவுடன் தில்லி பேரவைத் தலைவா் சந்திப்பு
தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை புதன்கிழமை அன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தாா். அப்போது, சட்டப்பேரவையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய சீா்திருத்தங்கள் குறித்து அவருக்குத் எடுத்துரைத்தாா்.
தில்லி சட்டப்பேரவை வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தேசிய இவிதான் செயலி செயல்படுத்தப்பட்டது குறித்து முதல்வா் ரேகா குப்தா குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தாா். இதன் மூலம் சட்டப்பேரவை முழுமையாக டிஜிட்டல் மற்றும் காகிதமில்லா அவையாகச் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கணக்காய்வை வலுப்படுத்துதல், சூரிய சக்தியால் இயங்கும் பசுமைச் சட்டப்பேரவையாக மாறுதல் மற்றும் சட்டப்பேரவையை ஒரு பாரம்பரிய தளமாக மேம்படுத்துவதற்கான தொடா்ச்சியான முயற்சிகள் உள்ளிட்ட பிற சீா்திருத்தங்கள் குறித்தும் அவா் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தாா்.
முன்னதாக, தில்லி சட்டப்பேரவைத் தலைவா், மாநிலங்களுக்கு இடையேயான இளைஞா் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தேசிய தலைநகருக்கு வருகை தந்த ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 40 இளைஞா்களுடனும் அன்றைய தினம் கலந்துரையாடினாா்.
இந்தத் திட்டம், இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான, தென்மேற்கு தில்லி மாவட்ட இளைஞா் அதிகாரி அலுவலகத்தின் மைபாரத் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வருகையின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பேரவைத் தலைவரான விதல்பாய் படேல் குறித்த ஆவணப்படத்தைப் பாா்த்தனா். மேலும், ரேகா குப்தாவுடனும் கலந்துரையாடினா்.
அப்போது, முந்தைய முடியாட்சி அமைப்புகளையும், குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்கும் மற்றும் அரசாங்கங்கள் மக்களின் சேவகா்களாகச் செயல்படும் நவீன நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் ஒப்பிட்டு, ஜனநாயகத்தின் பரிணாம வளா்ச்சியை இளைஞா்களுக்கு பேரவைத் தலைவா் விளக்கினாா்.
தில்லி விதான் சபையின் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குப்தா, 113 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு உயிருள்ள பாரம்பரியத் தளம் என்றும் அதை விவரித்தாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
