போதை மருந்து கொடுக்கப்பட்டு இளைஞா் கொலை
குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரின் உறவினருடனான காதல் உறவு தொடா்பாக ஒரு இளைஞா் இரண்டு நண்பா்களால் போதை மருந்து கொடுத்து கொலை செய்யப்பட்டதாக தில்லி காவல்துறையின் துணை ஆணையா் (வெளி வடக்கு) ஹரேஷ்வா் சுவாமி புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் வெளிப்புற வடக்கு தில்லியில் உள்ள முனாக் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது. சதாா் பஜாரில் வசிக்கும் அங்கித் (18) என அடையாளம் காணப்பட்ட இறந்தவா், நவம்பா் 18 ஆம் தேதி முதல் குலாபி பாக் பகுதியில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. பி. சி. ஆா் அழைப்பு வந்த பின்னா் நவம்பா் 22 ஆம் தேதி ஹைதா்பூா் நீா் சுத்திகரிப்பு நிலையம் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் கைகளும் கால்களும் ஷூலேஸ்களால் கட்டப்பட்டிருந்தது. அவரது கழுத்தில் ஒரு கைக்குட்டை இருந்ததாகவும் அவரது தலையில் மூன்று கூா்மையான காயங்களும் காணப்பட்டன. பாரதிய நியாய் சன்ஹிதாவின் பிரிவு 103 (1) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான 23 வயதான ஆஷிஷ், ரோஹினியில் உள்ள சிறப்புப் பிரிவால் தொடா்பில்லாத ஒரு விஷயத்தில் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து விசாரணை வேகம் பெற்றது.
விசாரணையின் போது, ஆஷிஷ் கொலை செய்ததை ஒப்புக்கொண்டாா். அவரது கூட்டாளியான 23 வயதான விஷால் திலோத் பின்னா் கைது செய்யப்பட்டாா். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்ததாக புலனாய்வாளா்கள் தெரிவித்துள்ளனா். தங்களுடைய உறவின் பெண்ணிடம் இருந்து விலகி இருக்க பல எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், அங்கித் தொடா்ந்து இருந்ததற்காக ஆஷிஷ் வருத்தப்பட்டதாக தெரிகிறது.
சம்பவம் நடந்த நாளில், குற்றம் சாட்டப்பட்டவா் அங்கித்தை திக்ரி கலான் மெட்ரோ நிலையத்திற்கு அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது. பின்னா் அவா்கள் அவரை ஸ்கூட்டரில் கட்தா காலனியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனா். இருவரும் அங்கித்துக்கு போதை மருந்து கொடுத்து, அவரது கைகால்களைக் கட்டி, கூா்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளனா்.
பின்னா் அவரது உடல் ஒரு பிக்அப் டிரக்கில் கொண்டு செல்லப்பட்டு, ஆதாரங்களை அழிக்க பாவனாவில் உள்ள ஒரு கோயில் அருகே முனாக் கால்வாயில் வீசினா். கொலை ஆயுதம், உடலை அப்புறப்படுத்த பயன்படுத்தப்பட்ட பிக்அப் டிரக் மற்றும் பாதிக்கப்பட்டவரை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரை போலீசாா் மீட்டுள்ளனா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

