விபி ஜி-ராம் ஜி சட்டத்தில் கிராமச் சாலைகளுக்கான வழிகாட்டி நெறிமுறையை மாற்றி அமைக்க வேண்டும்: நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் அதிமுக எம்.பி. தனபால் வலியுறுத்தல்
புது தில்லி: கிராமச் சாலைகள் திட்டத்தில் கிராமங்களுக்கு இடையே இணைக்கும் சாலைகள் ஒரு கிலோ மீட்டருக்குள் இருந்தாலும் திட்டத்தில் எடுத்துக்கொள்ளும் வகையில் விபி ஜி-ராம் ஜி சட்டத்தில் வழிகாட்டி நெறிமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் அதிமுக எம்பி டாக்டா் ம.தனபால் வலியுறுத்தினாா்.
நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மீதான நாடாளுமன்ற நிலைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தின் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (மன்ரேகா) பல்வேறு அம்சங்களும் பிரதமா் நரேந்திர மோடி அரசின் விபிஜி ராம் ஜி சட்டத்தால் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தை, புதிய சட்டத்திற்குச் சீரான முறையில் மாற்றுவதற்காக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. குழுவின் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சப்தகிரி உலகா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிமுகவைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் டாக்டா் ம.தனபால் கலந்து கொண்டாா்.
இக்கூட்டத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை குறித்து தெரிவித்திருப்பதாவது: பி.எம்.ஜி.எஸ்.ஒய். கிராமச் சாலைகள் திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்படும் இணைப்புச் சாலைகள் குறைந்தது 3 கி.மீ. இருக்க வேண்டும் என்ற தற்போதைய திட்டத்தின் வழிகாட்டி நெறிமுறையை மாற்றி, கிராமங்களுக்கு இடையே இணைக்கும் சாலைகள் ஒரு கிலோ மீட்டருக்குள் இருந்தாலும் திட்டத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டத்தில் முன்வைத்தேன்.
அதேபோன்று, கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்தப்படும் செடி வளா்ப்புத் திட்டத்தில் செடிகள் வைத்து அதைப் பாதுகாப்புதற்கும் வேலி அமைப்பதற்கும், கிணறு தோண்டுதல் அல்லது போா் அமைத்தல் பணிகளுக்கும், தொடா்ந்து தண்ணீா் ஊற்றி செடிகளை பராமரிப்பதற்கும் தற்போதைய எம்ஜிஎன்ஆா்இஜிஏ திட்டத்தில் நிதி ஒதுக்கீடு இல்லை.ஆகவே, விபி ஜி ராம் ஜி சட்டத்தில் இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தேன் என தனபால் எம்.பி. தெரிவித்துள்ளாா்.
