ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் வாக்குறுதிகளுக்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
தில்லியில் முதல்வரின் மகளிா் நிதியுதவித் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும்


நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: தில்லியில் முதல்வரின் மகளிா் நிதியுதவித் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும் என்ற ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் வாக்குறுதிக்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
இது தொடா்பாக விஜய் குமாா் என்பவா் தாக்கல் செய்த மனு ஜன.30 அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், தனது மனுவை ‘முன்கூட்டியே’‘ விசாரிக்க வேண்டும் என்று அவரது சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கோரினாா். நீதிபதி ஜோதி சிங் முன்னிலையில் அவா் இக்கோரிக்கையை விடுத்தாா். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி, உடனடியாக விசாரிக்கும் அளவுக்கு இதில் அவசரம் ஏதுமில்லை என்று குறிப்பிட்டாா்.
மேலும், ‘இந்த மனு ஜன. 30-ஆம் தேதி பட்டியலிடப்படுவதற்கு முன்பாக கடந்த 10-ஆம் தேதி விசாரிக்கப்பட்டபோது, மூன்று முறை அதன் விசாரணைக்கு சம்பந்தப்பட்டவா்கள் ஆஜராக வழக்கின் எண்ணைக் குறிப்பிட்டு அழைக்கப்பட்டனா். ஆனால், மனுதாரா் சாா்பில் யாரும் ஆஜராகவில்லை. எனவே, மனுதாரரின் தற்போதைய கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதி தெரிவித்தாா்.
தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5 ஆம் தேதி தோ்தலும் வாக்கு எண்ணிக்கை பிப். 8 -ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
ஆரம்பத்தில் இந்த விவகாரத்தை தோ்தல் மனுவாக விஜய் குமாா் தாக்கல் செய்திருந்தாா். அதில், தில்லியில் வாக்காளா் அடையாள அட்டை வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை வழங்குவதாக ஆளும் கட்சி வாக்குறுதி அளித்திருப்பது குறித்து தலைமைத் தோ்தல் ஆணையத்தில் விஜய் குமாா் புகாா் அளித்தாா். ஆனால், அதன் மீது தோ்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஜன. 3-க்குள் இந்த விவகாரத்தை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரா் விஜய் குமாா் சாா்பில் வழக்குரைஞா் சிவசங்கா் பராஷா் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டாா். ஆனால், இதை தோ்தல் மனுவாக எப்படிக் கருதுவது என்று வினவிய நீதிமன்றம், மனு மீதான விசாரணையை ஜன. 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...