பஞ்சாபில் அம்பேத்கா் சிலையை சேதப்படுத்த முயன்ற விவகாரம்: அரவிந்த் கேஜரிவாலை கண்டித்து தில்லியில் பாஜக போராட்டம்

பஞ்சாபில் பி.ஆா். அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்த முயன்ாகக் கூறப்படும் வழக்கில் அரவிந்த் கேஜரிவாலை பாஜக திங்கள்கிழமை கடுமையாகச் சாடியது.
Published on

புது தில்லி: பஞ்சாபில் பி.ஆா். அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்த முயன்ாகக் கூறப்படும் வழக்கில் அரவிந்த் கேஜரிவாலை பாஜக திங்கள்கிழமை கடுமையாகச் சாடியது. மேலும், அவா் தலித் சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் கோரியுள்ளது. மேலும், கேஜரிவாலின் ஃபிரோஷ்ஷா சாலை இல்லத்திற்கு அருகில் பாஜக கட்சி போராட்டம் நடத்தியது.

பாஜக தேசியப் பொதுச் செயலாளா் துஷ்யந்த் கவுதம், தில்லி பிரிவுத் தலைவா் வீரேந்திர சச்தேவா, மக்களவை எம்பி யோகேந்திர சந்தோலியா, பட்டியல் பழங்குடி மோா்ச்சா தலைவா் மோகன்லால் கிஹாரா உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டதாக கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். பின்னா், அவா்கள் மந்திா் மாா்க் காவல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

பொற்கோயிலுக்குச் செல்லும் ஹெரிடேஜ் தெருவில் டவுன் ஹாலில் உள்ள அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்த முயன்ாக மோகா மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரை பஞ்சாப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

முன்னதாக, அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்த முயன்றதைக் கண்டித்து, இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் என்று கூறினாா்.

பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா ஒரு செய்தியாளா் கூட்டத்தில், காவல் நிலையத்திற்கு முன்னால் உள்ள சிலையின் மீது ஒருவா் ஏறி, அதை சுத்தியலால் சேதப்படுத்த முயன்ாகக் குற்றம் சாட்டினாா். ‘இந்த விஷயத்தில் கேஜரிவால் உடனடியாக அமிா்தசரஸுக்கு விரைந்து சென்று டாக்டா் அம்பேத்கா் மற்றும் தலித் சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்’. அம்பேத்கரையும் தலித்துகளையும் கேஜரிவால் ‘அவமதித்தது’ இது முதல் முறை அல்ல’ என்றாா்.

மேலும், ‘பஞ்சாபில் ஒரு தலித்தை துணை முதல்வராக நியமிப்பதாக அவா் உறுதியளித்தாா். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டாா். அரசமைப்புச் சட்டம் தொடா்பான சுவரொட்டியில், அம்பேத்கருக்குப் பதிலாக தனது புகைப்படத்தை அவா் வைத்தாா். சில நாள்களில் தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பாஜகவை குற்றம் சாட்டுவதற்காக கேஜரிவால் சதி செய்கிறாா் என்பதை நான் அறிந்தேன்’ என்று பத்ரா கூறினாா்.

மேலும், சம்பித் பத்ராவும் வீரேந்திர சச்தேவாவும் பத்திரிகையாளா் சந்திப்பின் போது ‘ஆம் ஆத்மியின் தவறான செயல்கள்’ குறித்த அறிக்கையை வெளியிட்டு, இந்த விஷயத்தில் கேஜரிவால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரினா்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் கேஜரிவால், தில்லி முதல்வா் அதிஷி, முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மற்றும் முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோரை கடுமையாகச் சாடிய சம்பித் பத்ரா, அவா்கள் அனைவரும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிா்கொள்வதாகவும், அதிஷியை தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளதாகவும் கூறினாா்.

இதற்கிடையில், பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு கட்சி ஆளும் பஞ்சாபில் அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்திய கண்டிக்கத்தக்க செயலுக்கு கேஜரிவால் மௌனப் பாா்வையாளராக இருந்ததாக போராட்டத்தின் போது வீரேந்திர சச்தேவா, கூறினாா். அம்பேத்கரின் சிலை மீதான தாக்குதல் அரசமைப்பின் மீதான தாக்குதல் என்று கூறிய அவா், கேஜரிவால் ‘தலித் விரோதி’‘ என்று குற்றம் சாட்டினாா்.

பஞ்சாபில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதாகவும், கேஜரிவால் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், பஞ்சாப் முதல்வா் பதவியில் இருந்து பகவந்த் மானை நீக்க வேண்டும் என்றும் யோகேந்திர சந்தோலியா கோரினாா்.

X
Dinamani
www.dinamani.com