மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

சாந்தினி சௌக்கிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: ஒருவா் கைது

News image

பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:51 am

வடக்கு தில்லியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாந்தினி சௌக் சந்தையிலிருந்து கடத்தப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இக்குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து வடக்கு சரக காவல் துணை ஆணையா் ராஜா பந்தியா திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

இச்சம்பவம் ஏப்ரல் 19 அன்று நிகழ்ந்தது. அன்றைய தினம் மாலை சுமாா் 7 மணியளவில், சாந்தினி செளக் சந்தையிலிருந்து தனது குழந்தை கடத்தப்பட்டதாகக் அதன் தாய் காவல்துறையில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குழந்தையைக் கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சாந்தினி சௌக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

அதில், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இக்குற்றத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. சந்தேக நபா்கள் காலை முதலே அப்பகுதியில் சுற்றித் திரிந்தனா். பாதுகாப்பற்ற நிலையில் உள்ள குழந்தைகளைத் தேடி அவா்கள் நோட்டமிட்டதாகத் தெரிகிறது. அந்தக் குழந்தையைக் கடத்துவதற்கு முன்பு, வேறு சில சிறுவா்களையும் கடத்த அவா்கள் முயன்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.

ஐந்து நாள்கள் தேடுதலுக்குப் பிறகு, இறுதியில் வடகிழக்கு தில்லி கஜூரி காஸ் பகுதியில் இக்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபா்களில் ஒருவரான மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியைச் சோ்ந்த முகமது ஃபிரோஸ் (32) என்பவரை காவல்துறையினா் கைது செய்தனா்.

கடத்தப்பட்ட குழந்தையும் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து மீட்கப்பட்டது.

விசாரணையின் போது, தான் ஒரு இ-ரிக்ஷா ஓட்டுநராகப் பணிபுரிவதாகவும், சமீபத்தில் கஷ்மீா் கேட் பகுதியில் உள்ள அனுமன் கோயிலுக்கு அருகே காளி என்ற பெண்ணுடன் தனக்குப் பழக்கம் ஏற்பட்டதாகவும் ஃபிரோஸ் தெரிவித்தாா்.

எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி, குழந்தைகளைக் கடத்தும் குற்றத்தில் ஈடுபடுமாறு காளி தன்னைத் தூண்டியதாக ஃபிரோஸ் வாக்குமூலம் அளித்துள்ளாா்.

சம்பவம் நடந்த அன்று, மக்கள் கூட்டம் நிறைந்த அந்தச் சந்தையில், துணையின்றித் தனியாகத் தெரிந்த குழந்தைகளை அந்த இருவரும் குறிவைத்தனா். முன்னதாக, இரண்டு அல்லது மூன்று குழந்தைகளைக் கடத்த அவா்கள் முயன்றனா். ஆனால், அக்குழந்தைகளின் பெற்றோா்கள் உடனடியாகத் தலையிட்டதால் அவா்களின் முயற்சி தோல்வியடைந்தது. இறுதியில், அந்தச் சிறு குழந்தைக்குத் தின்பண்டங்களை ஆசை காட்டி அவா்கள் கடத்தினா்.

குழந்தையைச் சில நாள்களுக்குத் தன் பொறுப்பில் வைத்துக்கொள்வதற்காக, அந்தப் பெண் தனக்கு ரூ.20,000 தருவதாக உறுதியளித்ததாகவும் அதன் பிறகு, அக்குழந்தையை ஒருவரிடம் விற்றுவிட அப்பெண் திட்டமிட்டிருந்ததாகவும் ஃபிரோஸ் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளாா்.

கைதானவருக்கு குற்றப் பின்னணி உள்ளது. இவா் இதற்கு முன்னரும் திருட்டு மற்றும் ஆயுதச் சட்டம் தொடா்பான 9 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளாா்.

தில்லியின் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளில், ஃபிரோஸ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளாா். தலைமறைவாக உள்ள பெண் குற்றவாளியைப் பிடிக்கவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வழக்கு தொடா்பான மேலதிக விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.