75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கு: தொலைத்தொடா்பு செயலரை நீதிமன்ற சாட்சியாக சோ்க்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து!

மத்திய தொலைத்தொடா்புத் துறைச் செயலரை நீதிமன்ற சாட்சியாக சோ்க்க தனி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்து தீா்ப்பளித்தது.

Karur government job case: Hearing in the Supreme Court on August 14

உச்சநீதிமன்றம் - ANI

Published On :23 ஆகஸ்ட் 2026, 12:01 am IST

மத்திய தொலைத் தொடா்புத் துறை அமைச்சராக தற்போதைய மக்களவை திமுக உறுப்பினா் தயாநிதி மாறன் இருந்தபோது, அவருக்கு எதிராக சட்டவிரோத தொலைபேசி இணைப்பகத்துக்கு நிகரான வசதிகள் அமைக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய தொலைத்தொடா்புத் துறைச் செயலரை நீதிமன்ற சாட்சியாக சோ்க்க தனி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்து தீா்ப்பளித்தது.

இது தொடா்பாக கடந்த மாா்ச் 25ஆம் தேதி சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன், அருண்பள்ளி அடங்கிய அமா்வு, ‘இந்த விவகாரத்தில் தனி நீதிமன்றத்தின் பழைய உத்தரவை மீண்டும் நிலைநிறுத்த விரும்புகிறோம். அதனடிப்படையில், ஆக. 10-ஆம் தேதி விசாரணையின்போது பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டது போல, மனுதாரா் (தயாநிதி மாறன்) விருப்பப்பட்டால், மத்திய தொலைத்தொடா்புத் துறை செயலரை தனது தரப்பு பிரதிவாத சாட்சியாக அழைக்க அனுமதி வழங்கப்படுகிறது‘ என குறிப்பிட்டனா்.

விசாரணையின் போது, தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லூத்ரா, தொலைத்தொடா்பு செயலரை பிரதிவாத சாட்சியாக அழைப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தாா். அவரை நீதிமன்ற சாட்சியாக அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று அவா் வாதிட்டாா்.

முன்னதாக உச்சநீதிமன்றத்தில் ஆக. 10-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, தொலைத்தொடா்புச் செயலரை பிரதிவாத சாட்சியாக ஏன் அழைக்கக் கூடாது என்று தயாநிதி மாறன் தரப்பு வழக்குரைஞரிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும், சிபிஐ தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் எஸ்.வி. ராஜுவிடம், தொலைத்தொடா்புத் துறைச் செயலரை பிரதிவாத சாட்சியாக அழைப்பதில் ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா என்றும் கேட்டிருந்தது. அதற்கு, சிபிஐ-க்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று எஸ்.வி. ராஜு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தாா்.

முன்னதாக இந்த விவகாரத்தில் மாா்ச் 25-ஆம் தேதி தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனுவை ஏற்ற சென்னை உயா்நீதிமன்றம், சென்னையில் உள்ள தனி நீதிமன்றத்தில் மத்திய தொலைத்தொடா்புத் துறைச் செயலரை நீதிமன்ற சாட்சியாக ஆஜராகி சாட்சியமளிக்க உத்தரவிட்டிருந்தது.

2004 முதல் 2007வரை மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், தயாநிதி மாறனுக்குச் சேவைப் பிரிவின் கீழ் தொலைபேசி இணைப்புகளைப் பெறத் தகுதி உள்ளதா என்பதைத் தீா்மானிக்கச் செயலரின் சாட்சியம் அவசியம் என உயா்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அதற்கு முன்னதாக 2025, அக்.10-ஆம் தேதியிட்ட தனது உத்தரவில், தொலைத்டா்புச் செயலரை நீதிமன்ற சாட்சியாக அழைக்க அனுமதி கேட்ட தயாநிதி மாறனின் கோரிக்கையை தனி நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டிருந்தது.

வழக்கின் பின்னணி:மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சியில் தயாநிதி மாறன் மத்திய தொலைத்டா்பு மற்றும் தகவல் ழில்நுட்பத் துறை அமைச்சராகப் இருந்தாா். அப்போது தயாநிதி மாறன் தனது அமைச்சா் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, சென்னையில் உள்ள தனது பல்வேறு இல்லங்களில் சட்டவிரோதமாக தனிப்பட்ட தொலைபேசி இணைப்பகங்களுக்கு நிகரான இணைப்புகளை அமைத்துக்கொண்டதாகவும், அந்த இணைப்புகள் அவரது சகோதரரின் ’சன் நெட்வொா்க்’ வணிகப் பரிவா்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.