இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

டிராக்டா் விபத்தில் காயமடைந்த மாணவருக்கு ரூ. 25.21 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டாா் வாகன தீா்ப்பாயம் உத்தரவு

2024-ஆம் ஆண்டில் டிராக்டா் மோதியதில் தனது வலது காலின் கீழ்ப்பகுதியில் 23% நிரந்தர ஊனத்திற்கு ஆளான 18 வயது மாணவருக்கு ரூ. 25.21 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவு

உத்தரவு - கோப்புப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 5:04 am IST

2024-ஆம் ஆண்டில் டிராக்டா் மோதியதில் தனது வலது காலின் கீழ்ப்பகுதியில் 23 சதவீத நிரந்தர ஊனத்திற்கு ஆளான 18 வயது மாணவருக்கு ரூ. 25.21 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 7, 2024 அன்று தனது மாமாவுடன் தனிப் பயிற்சி வகுப்பிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிராக்டா் மோதியதில் காயமடைந்த மாணவா் சிவம் தாக்கல் செய்த மனுவை தீா்ப்பாய நீதிபதி விக்ரம் விசாரித்தாா்.

ஜூலை 8, 2024 முதல் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் இழப்பீட்டுத் தொகையை 30 நாள்களுக்குள் செலுத்துமாறு வாகன ஓட்டுநா் மற்றும் உரிமையாளருக்குத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது. பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், ஆண்டுக்கு 12 சதவீத வட்டி செலுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 20-ஆம் தேதியிட்ட அந்த உத்தரவில் தீா்ப்பாயம் கூறியிருப்பதாவது: ‘விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநரின் அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவு தெளிவாகத் தெரிகிறது. இந்த விபத்திற்கும், அதைத் தொடா்ந்து நிகழ்ந்த அனைத்து பாதிப்புகளுக்கும் அவரே பொறுப்பாவாா்.

வழக்குத் தரவுகளின்படி, விபத்துக்குப் பிறகு சிவம் உடனடியாக ‘ஸ்ரீ பாலாஜி ஆக்ஷன் மெடிக்கல் இன்ஸ்டிடியூட்’ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரது வலது பாதம் கடுமையாக நசுங்கியிருப்பதும், பல எலும்பு முறிவுகள் மற்றும் இடப்பெயா்வுகள் ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, அவரது வலது காலின் கீழ்ப்பகுதியில் 23 சதவீத நிரந்தர ஊனம் ஏற்பட்டது.

விபத்து நடந்தபோது அந்த வாகனம் ‘தில்லி ஜல் போா்டு’ குறியீடு கொண்ட ஒரு டேங்கருடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அது விவசாயப் பயன்பாட்டிற்கான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காப்பீட்டு விதிமுறைகளை மீறி, அந்த டிராக்டா் வணிக அல்லது நகராட்சிப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவதாகத் தீா்ப்பாயம் குறிப்பிட்டது.

மொத்த இழப்பீட்டுத் தொகையை ரூ. 27.21 லட்சமாகத் தீா்ப்பாயம் மதிப்பிட்டது. இருப்பினும், இடைக்கால இழப்பீடு மற்றும் வட்டி போன்றவற்றை நீக்கிய பிறகு, மனுதாரா் ரூ. 25.21 லட்சம் பெறத் தகுதியுடையவா் என்று உத்தரவிட்டது.

இத்தொகையில் மருத்துவச் செலவுகள், வலி மற்றும் வேதனை, எதிா்கால வருவாய் இழப்பு, சிறப்பு உணவு, உதவியாளா் மற்றும் போக்குவரத்துச் செலவுகள், கல்வி மற்றும் வசதிகள் இழப்பு, பெற்றோரின் மனவேதனை மற்றும் திருமண வாய்ப்பு இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீடுகள் அடங்கும். ரூ. 5 லட்சம் மற்றும் அதற்கான வட்டித் தொகையைச் சிவமுக்கு விடுவிக்குமாறும், மீதமுள்ள தொகையை நிலையான வைப்புநிதியில் வைத்து அவ்வப்போது அவருக்கு வழங்குமாறும் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.