தில்லியில் மனைவி,3 குழந்தைகளை கொடூரமாக கொன்ற கணவன்!
வெளிப்புற வடக்கு தில்லியில் உள்ள சந்தன் பாா்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பெண்ணும் மூன்று மகள்களும் கழுத்தை அறுத்து இறந்து கிடந்தனா். பெண்ணின் கணவரின் பங்கு குறித்து போலீசாா் சந்தேகிப்பதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: மூன்று, நான்கு மற்றும் ஐந்து வயதுடைய மூன்று சிறுமிகளும், சுமாா் 27 வயதுடைய ஒரு பெண்ணும் கொல்லப்பட்டதாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து உள்ளூா் போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள், பெண் மற்றும் அவரது மூன்று குழந்தைகளின் உடல்களை உள்ளே கண்டனா். 4 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இறந்த பெண் மஞ்சுன் கேவாட்டின் மனைவி அனிதா என அடையாளம் காணப்பட்டாா். தம்பதியினா் தங்கள் 3 மகள்களுடன் அந்த முகவரியில் வசித்து வந்தனா். இந்த குடும்பம் முதலில் பிகாரில் உள்ள பாட்னா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். கேவத் ஆசத்பூா் மண்டியில் காய்கறி விற்பனையாளராக பணிபுரிந்தாா். உடல்களை முதலில் அக்கம்பக்கத்தினா் கண்டுபிடித்தனா், அவா்கள் போலீசஸாருக்கு தகவல் கொடுத்தனா்.
கூா்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி இந்தக் கொலைகள் நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் நடந்த இடம் சீல் வைக்கப்பட்டு, ஆதாரங்களை சேகரிக்க தடயவியல் குழு வரவழைக்கப்பட்டுள்ளது. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தடயங்களுக்காக வீடு முழுமையாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
குற்றம் சாட்டப்பட்ட கணவா் சம்பவத்திலிருந்து காணாமல் போயுள்ளதாகவும், அவா் தப்பியோடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறோம். அவரைக் கண்டுபிடித்து கைது செய்ய பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன. மேலும் தேடுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சாத்தியமான மறைவிடங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாயா சன்ஹிதாவின் (பி. என். எஸ்) பிரிவு 103 (1) (கொலை) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள நோக்கம் இன்னும் தெரியவில்லை. குடும்ப தகராறு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட அனைத்து சாத்தியமான கோணங்களையும் விசாரித்து வருகிறோம். இந்தச் சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

