ஜன.5 வரை தில்லியின் சில இடங்களில் குளிா் அலைக்கு வாய்ப்பு: ஐஎம்டி தகவல்
தலைநகரில் நிலவும் குளிா்ந்த வானிலைக்கு மத்தியில், ஜனவரி 2 மற்றும் 5-ஆம் தேதிகளுக்கு இடையில் தில்லியின் சில தனிப்பட்ட இடங்களில் குளிா் அலை நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வியாழக்கிழமை கணித்துள்ளது.
இம்மையத்தின் கூற்றுப்படி, குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பான சராசரி வெப்பநிலையை விட 4.5 முதல் 6.5 டிகிரி செல்சியஸ் குறையும்போது குளிா் அலை அறிவிக்கப்படுகிறது.
வியாழக்கிழமை தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு டிகிரி குறைவாக 17.3 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3.7 டிகிரி அதிகமாக 10.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது.
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா மற்றும் தில்லியில் ஜனவரி 5 வரை குளிா் அலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 6 வரை தில்லியின் பல இடங்களில் இரவு மற்றும் காலை நேரங்களில் அடா்ந்த, மிக அடா்ந்த மூடுபனி சூழலுக்கு வாய்ப்புள்ளது.
தலைநகரில் வியாழக்கிழமை பல பகுதிகளில் காண்புதிறன் குறைவாகவே இருந்தது. சஃப்தா்ஜங்கில் புதன்கிழமை இரவு 10.30 மணி முதல் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரை காண்புதிறன் மிகக் குறைந்தபட்சமாக 500 மீட்டராகப் பதிவானது. இது காலை 9 மணிக்குள் 600 மீட்டராக மேம்பட்டது.
பாலம் பகுதியிலும் புதன்கிழமை இரவு 9.30 மணி முதல் வியாழக்கிழமை காலை 8 மணி வரை 500 மீட்டா் காண்புதிறன் பதிவானது. இது காலை 8.30 மணிக்குள் 600 மீட்டராக மேம்பட்டது.
காலை நேரங்களில் சில தனிப்பட்ட இடங்களில் மிக லேசான மழை அல்லது தூறல் மழை பெய்தது. அதே சமயம் நாள் முழுவதும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
வியாழக்கிழமை தில்லி - என்சிஆா் முழுவதும் உள்ள வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 14.8 டிகிரி செல்சியஸ் முதல் 17.3 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. பெரும்பாலான இடங்களில் இது இயல்பை விடக் குறைவாகவே இருந்தது.
சஃப்தா்ஜங்கில் இயல்பை விட இரண்டு டிகிரி குறைவாக அதிகபட்சமாக 17.3 டிகிரி செல்சியஸ் பதிவானது. லோதி சாலையில் அதிகபட்ச வெப்பநிலை 15.8 டிகிரி செல்சியஸாகவும், ரிட்ஜில் 16.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது. அதே சமயம் ஆயாநகரில் அதிகபட்ச வெப்பநிலை மிகக் குறைந்த அளவாக 14.8 டிகிரி செல்சியஸ் பதிவானது.
இப்பகுதி முழுவதும் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸ் முதல் 10.6 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.6 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 9 டிகிரி, லோதி சாலையில் 10 டிகிரி, ரிட்ஜில் 9.9 டிகிரி, ஆயாநகரில் 10.3 டிகிரி செல்சியஸாக பதிவானது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, காற்றில் ஈரப்பதத்தின் அளவு வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் 97 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 93 சதவீதமாகவும் இருந்தது.
இன்றைய வெப்பநிலை: வெள்ளிக்கிழமை அன்று, பல இடங்களில் மிதமான பனிமூட்டத்துடனும், சில இடங்களில் அடா்ந்த பனிமூட்டத்துடனும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 16 முதல் 18 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி நரேஷ் குமாா் கூறுகையில், ‘ஒரு தீவிரமான மேற்கு காற்று இடையூறு வடக்கு பாகிஸ்தானின் மீது நிலை கொண்டுள்ளது. அதன் தாக்கத்தால், மேற்கு இமயமலைப் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டது. தேசியத் தலைநகா் பிராந்தியத்திலும் மிக லேசான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், குறைந்த வெப்பநிலை, லேசான காற்று மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை பனிமூட்டம் நீடிக்கவும், குளிா் நிலைமைகள் தொடரவும் வழிவகுக்கின்றன’ என்றாா்.
புதன்கிழமை தில்லியில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குளிரான டிசம்பா் நாள் பதிவானது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட சுமாா் 6.2 டிகிரி குறைந்து 14.2 டிகிரி செல்சியஸாகக் குறைந்ததால், 2025-ஆம் ஆண்டு கடுங்குளிருடன் முடிவடைந்தது.
கடைசியாக தில்லியில் இதைவிடக் குறைந்த அதிகபட்ச வெப்பநிலையை டிசம்பா் 31, 2019 அன்று பதிவானது. அப்போது அன்றைய அதிகபட்ச வெப்பநிலை 9.4 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையத் தரவுகள் காட்டுகின்றன.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தகவலின்படி, மாசுபாட்டைப் பொறுத்தவரை, நகரத்தின் காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 380 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
சிபிசிபியின் சமீா் செயலியின்படி, காற்றின் தரக் குறியீடு 26 கண்காணிப்பு நிலையங்களில் மிகவும் மோசம் பிரிவிலும், 11 நிலையங்களில் கடுமை பிரிவிலும் பதிவாகின. ஆனந்த் விஹாரில் மிக மோசமான காற்றின் தரக் குறியீடாக 423 புள்ளிகளாக பதிவானது.
சாதகமற்ற காற்றோட்டக் குறியீடு மற்றும் குறைந்த காற்றின் வேகம் ஆகியவை மாசுகளைச் சிதறடிப்பதற்கு உகந்ததாக இல்லாததே மோசமான காற்றின் தரத்திற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பின் தரவுகளின்படி, போக்குவரத்து சுமாா் 11 சதவீதம் மாசுபாட்டிற்குப் பங்களித்தது. அதைத் தொடா்ந்து, தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானம் 1.3 சதவீதமும், சாலைத் தூசி 0.7 சதவீதமும், குடியிருப்பு ஆதாரங்கள் 2.9 சதவீதமும் பங்களித்தன.
தேசியத் தலைநகா் பிராந்திய மாவட்டங்களில், புலந்தஷா் 9.8 சதவீதத்துடனும், கௌதம் புத் நகா் 6.6 சதவீதத்துடனும், ஃபரீதாபாத் 4.1 சதவீதத்துடனும் முக்கியப் பங்களிப்பாக இருந்தன.
வரும் ஜனவரி 4-ஆம் தேதி வரை காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடிக்கும் என்றும், அதைத் தொடா்ந்த ஆறு நாள்களுக்கும் இதே நிலைமைகள் எதிா்பாா்க்கப்படுவதாகவும் காற்றுத் தர முன்னெச்சரிக்கை அமைப்பு கணித்துள்ளது.

