கோப்புப் படம்
கோப்புப் படம்

தில்லியில் காற்றின் தரத்தில் தொடா்ந்து முன்னேற்றம்!

பருவகால சராசரியைவிட வெப்பநிலை குறைவாக இருந்தபோதிலும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, தில்லியில் காற்றின் தரக் குறியீடு 153 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது.
Published on

பருவகால சராசரியை விட வெப்பநிலை குறைவாக இருந்தபோதிலும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரக் குறியீடு 153 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தகவலின்படி, தலைநகா் தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 18.5 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது பருவகால சராசரியை விட 1.8 டிகிரி குறைவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 6.6 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது பருவகால சராசரியை விட 0.9 டிகிரி குறைவாகும்.

பல்வேறு வானிலை ஆய்வு நிலையங்களில், சஃப்தா்ஜங்கில் அதிகபட்ச வெப்பநிலை 18.5 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 15.7 டிகிரி செல்சியஸ், லோதி சாலையில் 18 டிகிரி செல்சியஸ், ரிட்ஜில் 18.7 டிகிரி செல்சியஸ் மற்றும் ஆயாநகரில் 18.1 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகி இருந்தது.

இதற்கிடையில், சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.6 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 4.5 டிகிரி செல்சியஸ், லோதி சாலையில் 5.8 டிகிரி செல்சியஸ், ரிட்ஜில் 6.1 டிகிரி செல்சியஸ் மற்றும் ஆயாநகரில் 5.3 டிகிரி செல்சியஸ் எனப் பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணிக்கு 90 சதவீதமாகவும், மாலை 5.30 மணிக்கு 63 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, சனிக்கிழமை 192 புள்ளிகளாக இருந்த காற்றின் தரக் குறியீடு, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு 153 புள்ளிகளாகப் பதிவானது. காற்றின் தரக்குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் ‘நல்லது’, 51 முதல் 100 வரை ‘திருப்திகரமானது’, 101 முதல் 200 வரை ‘மிதமானது’, 201 முதல் 300 வரை ‘மோசம்’, 301 முதல் 400 வரை ‘மிகவும் மோசம்’ மற்றும் 401 முதல் 500 வரை ‘கடுமையானது’ எனக் கருதப்படுகிறது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை இரவு நேரத்தில் பொதுவாக மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசானது முதல் மிதமான பனிமூட்டத்துடனும் வானம் காணப்படும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 20 மற்றும் 5 டிகிரி செல்சியஸைச் சுற்றி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com