என்சிஆா் பகுதியைச் சோ்ந்த என்ஜிஓ நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத் துறை சோதனை
அந்நியச் செலாவணி விதிமீறல் விசாரணையின் ஒரு பகுதியாக தில்லி என்சிஆா் பகுதியைத் தளமாகக் கொண்ட காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அரசு சாரா (என்ஜிஓ) நிறுவனத்திற்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் திங்கள்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது: சதத் சம்படா பிரைவேட் லிமிடெட்டின் அலுவலக வளாகம், ஒரு வணிகக் கடை மற்றும் தில்லி, காஜியாபாதில் உள்ள இரண்டு குடியிருப்புகளில் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (ஃபெமா) விதிகளின் கீழ் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.
ஆலோசனைக் கட்டணங்கள் என்ற பெயரில் வெளிநாட்டின் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் வேறு சில குழுக்களிடமிருந்து இந்த என்ஜிஓ அமைப்பு பெற்ற சில அந்நியச் செலாவணியின் ‘இறுதிப் பயன்பாடு’ குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
அரசின் கொள்கைகளை மேலாதிக்கம் செலுத்தவதற்காக இந்த என்ஜிஓ நிறுவனம் வெளிநாட்டு நிதியைப் பெற்ாகக் கூறப்படுகிறது. அமலாக்கத் துறையால் இந்நிறுவனம் மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு என்ஜிஓ அமைப்பிடமிருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
