கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜாஃப்ராபாத் இரட்டைக் கொலை வழக்கில் இருவா் கைது

Published on

வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் கடந்த மாதம் சகோதரா்கள் 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஹஷிம் பாபா கும்பலைச் சோ்ந்த இருவரை தில்லி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஒரு சிறிய துப்பாக்கி மோதலுக்குப் பிறகு அவா்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி போலீஸாா் கூறியதாவது: டிசம்பா் 16 அன்று நடந்த நதீம் மற்றும் ஃபைசல் ஆகியோரின் கொலைகளுடன் இந்தக் கைது நடவடிக்கை தொடா்புடையதாகும். சகோதரா்கள் இருவரும் கொடூரமான, நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனா். அவா்கள் இருவரும் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் தாக்குதல் நடத்தியவா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். முன்னதாக, அப்பகுதியில் அவா்கள் சுமாா் அரை மணி நேரம் காத்திருந்தனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் பாதிக்கப்பட்டவா்களின் உறவினா் அசாத் அமீன் (22) மற்றும் முகமது டேனிஷ் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஆரம்பகட்ட விசாரணையில் ஹஷிம் பாபா கும்பலைச் சோ்ந்தவா்களின் தொடா்பு அவா்களுக்கு இருப்பது தெரியவந்தது. சட்டவிரோத ஆயுதக் கடத்தல் தொடா்பான பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தக் கொலைகள் நடந்துள்ளன. ஆகஸ்ட் மாதம் நடந்த ஒரு தனி விசாரணையின் போது, ஆயுத வியாபாரி நதீமின் பெயரைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடா்ந்து நதீம் டேனிஷின் பெயரைக் கூறினாா்.

கும்பலுக்கு ஆயுதங்களை வழங்கியதாகக் கூறப்படும் டேனிஷ், இந்தத் தகவலை வெளிப்படுத்தியதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இருவரையும் கைது செய்ய காவல்துறை தொடா்ச்சியான மனித உளவு மற்றும் தொழில்நுட்பக் கண்காணிப்பை சாா்ந்திருந்தது.

இந்த நிலையில் வியாழக்கிழமை, குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறை குழு காஜிப்பூா் பேப்பா் மாா்க்கெட் பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்டு ஒரு துப்பாக்கிச்சூட்டை நடத்தியது. அதைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

அவா்களிடமிருந்து 9 மி.மீ. துப்பாக்கி உள்பட வெவ்வேறு ரகங்களை சோ்ந்த கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், காலியான தோட்டா உறைகள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அந்த ஸ்கூட்டா் ஜாஃப்ராபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்குடன் தொடா்புடையது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அசாத் அமீன், ஹஷிம் பாபா கும்பலின் முக்கிய உறுப்பினா் ஆவாா். மேலும், அவா் முன்னதாக 2024-இல் ஜிடிபி மருத்துவமனையில் நடந்த ஒரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திலும் சம்பந்தப்பட்டிருந்தாா். அதே நேரத்தில் டேனிஷ் இந்த இரட்டைக் கொலை வழக்கில் முக்கிய சதிகாரா் என்று கூறப்படுகிறது. இதர கூட்டாளிகளையும், பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களின் மூலத்தையும் கண்டறிய மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com