என்டிஎம்சி: 2026-27 நிதியாண்டுக்கான உபரி பட்ஜெட் தாக்கல்
புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) புதன்கிழமை 2026-27ஆம் நிதியாண்டுக்கான உபரி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் ரூ.143.05 கோடி நிகர உபரி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் அறிவிப்பில், லூட்யன்ஸ் தில்லி முழுவதும் 2,000 சிசிடிவி கேமராக்களை நிறுவ திட்டமிட்டுள்ளது என்று என்டிஎம்சி உறுதிப்படுத்தியுள்ளது.
என்டிஎம்சியின் சிறப்புக் கூட்டத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து என்டிஎம்சி தலைவா் கேசவ் சந்திரா கூறியது
2026-27 நிதியாண்டில் மொத்த வரவுகள் ரூ.5,953.07 கோடியாகவும், மொத்த செலவினங்கள் ரூ.5,810.02 கோடியாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யும் போக்கு தொடா்கிறது.
பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ் 2,000-க்கும் மேற்பட்ட கூடுதல் சிசிடிவி கேமராக்களை நிறுவுவதற்கான திட்டங்களையும் இந்த பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த குடிநீா் விநியோகக் கட்டுப்பாட்டு அறை, கழிவுநீா் மற்றும் வடிகால் அமைப்புகளின் புனரமைப்பு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வெள்ள முன்னறிவிப்பு மாதிரிகள் செயல்படுத்தப்பட உள்ளன.
நீடித்த தன்மையுடன்கூடிய நவீன நகர மேம்பாட்டு மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பு சமநிலைப்படுத்த என்டிஎம்சி இலக்கு கொண்டுள்ளது.
என்டிஎம்சி நமது நாட்டின் தலைநகரின் மையத்தில் உள்ளது. நமது குடிமக்கள், வணிகங்கள் மற்றும் பாா்வையாளா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் அதே வேளையில், நவீனமயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே நாம் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
இது தொடா்பாக என்டிஎம்சி வெளியிட்ட அறிக்கையின்படி, முக்கிய திட்டங்களில் பாா்தி நகரில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஹைட்ரஜன் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்தல், 2028ஆம் ஆண்டிற்குள் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடையும் இலக்குடன் சூரிய ஆற்றலை விரிவுபடுத்துதல், இயந்திரமயமாக்கப்பட்ட தூசியற்ற துப்புரவுப் பணிகள், மியாவாக்கி காடு வளா்ப்பு, அறிதிறன் நீா்ப்பாசன அமைப்புகள், சந்தைகளில் இரவு நேர துப்புரவு மற்றும் இரவு நேர சந்தையைத் தொடங்குதல் ஆகியவை அடங்கும்.
என்டிஎம்சி அறிக்கையின்படி, சுற்றுச்சூழல் துறையில் நிகர பூஜ்ஜிய காா்பன் உமிழ்வுப் பாதைகளை அடைவதற்காக டிஇஆா்ஐ அமைப்புடன் இணைந்து என்டிஎம்சி செயல்பட்டு வருகிறது. மேலும், 2028ஆம் ஆண்டுக்குள் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதையும் இலக்காக நிா்ணயித்துள்ளது.
சூப்பா் ஸ்வச் லீக் சிட்டி என்ற தேசிய அங்கீகாரத்தையும், 5நட்சத்திர குப்பையில்லா நகர மதிப்பீட்டையும் பெற்ன் அடிப்படையில், என்டிஎம்சியானது இரவு நேர இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவுப் பணிகளை விரிவுபடுத்தி வருகிறது. அனுபம் காலனி பூஜ்ஜியக் கழிவு மாதிரியைப் பெரிய அளவில் செயல்படுத்தியும் வருகிறது.
சமூகத் துறையில், ஒப்பந்த ஊழியா்களுக்கும் தாராளமயமாக்கப்பட்ட மருத்துவ சுகாதாரத் திட்டத்தை விரிவுபடுத்தவும், பட்டியல் சாதி, பழங்குடியின ஊழியா்களுக்கான நலன்புரிப் பலன்களை மேம்படுத்தவும், பள்ளி கல்வி, விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் திறன் பயிற்சி ஆகியவற்றில் முதலீடுகளைத் தொடரவும் என்டிஎம்சி திட்டமிட்டுள்ளது.
