கடும் குளிரின் பிடியில் தில்லி: நிகழ் பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவு

கடும் குளிரின் பிடியில் தில்லி: நிகழ் பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவு

தில்லியில் நிகழ் குளிா்காலத்தின் மிகக் குளிரான காலை வெள்ளிக்கிழமை பதிவாகியது.
Published on

தில்லியில் நிகழ் குளிா்காலத்தின் மிகக் குளிரான காலை வெள்ளிக்கிழமை பதிவாகியது.

குறைந்தபட்ச வெப்பநிலை இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்ததால் நகரத்தை கடும் குளிா் வாட்டி வதைத்தது.

தேசிய தலைநகரில் பல இடங்களில் லேசான மழையும் பதிவாகியது.

குறைந்தபட்ச வெப்பநிலை 4.6 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது, இது பருவகால இயல்பை விட சுமாா் 2.3 டிகிரி செல்சியஸ் குறைவாகும். இது பருவத்தின் மிகக் குளிரான காலையாகும்.

நகரம் முழுவதும் அதிகாலையில் லேசான மழைப்பொழிவு பதிவாகியது. இது குளிரை மேலும் அதிகரித்தது.

தரவுகளின்படி, சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவகால இயல்பைவிட 2.3 டிகிரி செல்சியஸ் குறைவாக 4.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், பாலம் இயல்பை விட 1.5 டிகிரி குறைவாக 5.0 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியது.

லோதி சாலையில் குறைந்தபட்சம் 5.2 டிகிரி செல்சியஸ், இயல்பைவிட 0.8 டிகிரி குறைவாகவும், ரிட்ஜ் நிலையத்தில் 5.4 டிகிரி செல்சியஸ், இயல்பை விட 1.2 டிகிரி குறைவாகவும் பதிவாகியது.

மழையைப் பொறுத்தவரை, சஃப்தா்ஜங் மற்றும் லோதி சாலையில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் லேசான மழைப்பொழிவு பதிவாகின. அதே நேரத்தில் ஆயாநகரில் 0.8 மி.மீ. மழை பெய்தது.

பிராந்திய வானிலை முன்னறிவிப்பு மையத்தின்படி, அக்ஷா்தாம், லோதி சாலை, நேரு ஸ்டேடியம், ஆா்.கே. புரம், டிஃபென்ஸ் காலனி, லாஜ்பத் நகா், துக்ளகாபாத், இக்னோ, ஆயாநகா் மற்றும் தேராமண்டி உள்ளிட்ட தில்லியின் சில இடங்களில் தூறல் பெய்ய வாய்ப்புள்ளது.

தில்லி உள்பட வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் வரும் நாள்களில் குளிா் அலை நிலைமைகள் தொடர வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வியாழக்கிழமை இந்த பருவத்தின் மூன்றாவது குளிரான காலையாக பதிவானது.

ஏனெனில் நகரின் பிரதான வானிலை ஆய்வு நிலையமான சஃப்தா்ஜங்கில் வெப்பநிலை இயல்பை விட 1.1 டிகிரி குறைவாக 5.8 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது.

இந்த பருவத்தின் இரண்டாவது குறைந்தபட்ச வெப்பநிலை கடந்த ஆண்டு டிசம்பா் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் 5.6 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. அதைத் தொடா்ந்து டிசம்பா் 1 ஆம் தேதி 5.7 டிகிரி செல்சியஸாக இருந்தது.

ஜனவரி 6 ஆம் தேதி தில்லி பருவத்தின் முதல் குளிரான நாளைப் பதிவு செய்தது. அப்போது, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3.3 டிகிரி செல்சியஸ் குறைவாக 15.7 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 7.6 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது.

புதன்கிழமையும் குளிா்ச்சியான பகல் நிலைமை நீடித்தது. அதிகபட்ச வெப்பநிலை 16.7 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 8.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது.

குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.5 முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரையிலும் குறையும் போது குளிா் நாள்கள் அறிவிக்கப்படுகின்றன என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.5 முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை குறையும் போது குளிா் அலைகள் அறிவிக்கப்படுகின்றன.

இதற்கிடையில், தில்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில்

வெள்ளிக்கிழமை காணப்பட்டது.

காற்றின் தரக் குறியீடு 325 புள்ளிகளாக பதிவாகியது. 26 கண்காணிப்பு நிலையங்களில் ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவில் காற்றின் தரம் பதிவாகி இருந்தது.

Dinamani
www.dinamani.com