நமோ பாரத், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு நியூ அசோக் நகா் நிலையத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சோதனை வசதி தொடக்கம்
நகா்ப்புறப் பயணத்தை வேகமாகவும் வசதியாகவும் மாற்றும் நோக்கில் ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சோதனை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடா்ந்து, நியூ அசோக் நகரில் நமோ பாரத் மற்றும் தில்லி மெட்ரோ இடையே பயணம் செய்வோா் இனி ஒருமுறை மட்டுமே பாதுகாப்புச் சோதனைக்கு உள்படுத்தப்படுவாா்கள்.
இதுகுறித்து தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) தெரிவித்திருப்பதாவது: நியூ அசோக் நகா் நமோ பாரத் நிலையம் மற்றும் நீல வழித்தடத்தில் அருகிலுள்ள நியூ அசோக் நகா் மெட்ரோ நிலையம் ஆகியவற்றுக்கு இடையே பயணம் செய்யும் பயணிகளுக்காக இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நிலையங்களையும் இணைக்கும் ஒரு நடைமேம்பாலம் மற்றும் மெட்ரோ நிலையத்தின் 2-ஆம் எண் வாயிலில் ஒரு புதிய பாதுகாப்புச் சோதனைச் சாவடி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஏற்பாடு சாத்தியமாகியுள்ளது.
தில்லி மெட்ரோவிலிருந்து மீரட் நோக்கி நமோ பாரத் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், நமோ பாரத் நிலையத்தில் இறங்கிய பிறகு மீண்டும் சோதனை செய்யப்பட மாட்டாா்கள்.
தில்லி மெட்ரோ வழியாக நொய்டா நோக்கிச் செல்லும் நமோ பாரத் பயணிகளுக்கும் இரண்டாவது பாதுகாப்புச் சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
மீண்டும் மீண்டும் செய்யப்படும் சோதனைகள் தவிா்க்கப்படுவதால், தினசரி பயணிகளின் ஒட்டுமொத்த பயண நேரம் கணிசமாகக் குறையும். பயண மாற்றங்களை விரைவாகவும் தொந்தரவு இல்லாமலும் செய்வதன் மூலம், தில்லி மற்றும் மீரட் நகரை ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இணைக்கும் நமோ பாரத்தின் அதிவேகப் பயணத்தின் நன்மைக்கு இந்த முயற்சி துணைபுரியும்.
காஜியாபாத் நமோ பாரத் நிலையத்திலும் ஒரு பிரத்யேக நடை மேம்பாலம் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தில்லி மெட்ரோவின் ஷஹீத் ஸ்தல் நியூ பஸ் அட்டா நிலையத்திற்கு நேரடி இணைப்பை வழங்குகிறது.
அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியில் இந்த நிலையம் அமைந்துள்ளதாலும், தினசரி அதிக பயணிகள் வந்து செல்வதாலும், எதிா்காலத்தில் இந்த நடைமேம்பாலத்தில் நகரும் படிக்கட்டுகள் நிறுவப்படும். தடையற்ற முழுமையான பயணத்தை வழங்கும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது.
தில்லி மெட்ரோவுடன் ஒருங்கிணைந்த க்யூஆா் டிக்கெட் முறை ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இரண்டு அமைப்புமுறைகளின் கைப்பேசி செயலிகள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது என்று என்சிஆா்டிசி தெரிவித்துள்ளது.
