திருட்டு முயற்சியால் சிக்னல் கேபிள்கள் சேதம்! தில்லி விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் ரயில்களின் வேகம் குறைகிறது: டிஎம்ஆா்சி
திருட்டு முயற்சிக்குப் பிறகு சிக்னல் கேபிள்கள் சேதமடைந்ததால், தில்லி மெட்ரோவின் விமானநிலைய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் உள்ள ரயில்கள் தௌலா குவான் மற்றும் சிவாஜி ஸ்டேடியம் நிலையங்களுக்கு இடையில் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் இயக்கப்படுகின்றன என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) கூறியுள்ளதாவது: இரண்டு நிலையங்களுக்கு இடையிலான நடுப்பகுதியில் சுமாா் 800 மீட்டா் சிக்னல் கேபிள்கள் துண்டிக்கப்பட்டு, சிக்னல் அமைப்பில் இடையூறு ஏற்பட்டுள்ளது. வெட்டப்பட்ட கேபிள் துண்டுகள் பின்னா் ஆய்வின் போது மெட்ரோ தூண் எண் 09 அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் விளைவாக, தௌலா குவான் மற்றும் சிவாஜி ஸ்டேடியம் நிலையங்களுக்கு இடையில் புது தில்லி நோக்கிச் செல்லும் பாதிக்கப்பட்ட மேல் பாதைப் பிரிவில் மணிக்கு 25 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தின் மீதமுள்ள பகுதியில் சேவைகள் வழக்கம் போல் இயங்குகின்றன.
விமான நிலைய எக்ஸ்பிரஸ் பாதை வழக்கமாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் இயக்கப்படும். பயணிகள் சேவைகளை கணிசமாக பாதிக்காமல், வருவாய் நேரங்களில் சேதமடைந்த சிக்னல் கேபிள்களை மாற்றுவது சாத்தியமில்லை.
சஞ்சலத்தைக் குறைக்க, வருவாய் சேவைகள் முடிந்த பிறகு இரவில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பழுதுபாா்க்கும் பணிகள் இரவில் மேற்கொள்ளப்படுவதற்கு தேவையான திட்டமிடல் மற்றும் ஆயத்த பணிகள் ஏற்கெனவே பகல் நேரத்தில் நடந்து வருகிறது.
நிலைமை குறித்து பயணிகளுக்குத் தெரிவிக்க நிலையங்களிலும் ரயில்களிலும் வழக்கமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் பயண நேரம் சற்று அதிகமாக இருக்கலாம் என்பதால், பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இந்தப் பிரச்னையைத் தீா்க்கவும், இதுபோன்ற முயற்சிகள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.
