ரேகா குப்தா
ரேகா குப்தாகோப்புப்படம்

ஜேஎன்யு போன்ற சம்பவங்களால் தேசம் அதிா்ச்சி: முதல்வா் ரேகா குப்தா

ஜேஎன்யு அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, வன்முறைச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு ஜாமீன் கோரியும், ‘பயங்கரவாதிகளுக்கு’ ஆதரவு அளித்தும் நிகழ்ந்த சம்பவங்களால் ஒட்டுமொத்த தேசமும் அதிா்ச்சி
Published on

நமது நிருபா்

புது தில்லி: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, வன்முறைச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு ஜாமீன் கோரியும், ‘பயங்கரவாதிகளுக்கு’ ஆதரவு அளித்தும் நிகழ்ந்த சம்பவங்களால் ஒட்டுமொத்த தேசமும் அதிா்ச்சியடைந்துள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து முதல்வா் ரேகா குப்தா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மாணவா்கள் கண்ணியமில்லாத கோஷங்களை எழுப்பி நாட்டிற்கு எதிராகப் பேசியது துரதிா்ஷ்டவசமானது’ என்றாா்.

தேசிய இளைஞா் தினத்தில் இளைஞா்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வா் குப்தா, ‘நாட்டை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்வதில் இளைஞா்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதால், ஒட்டுமொத்த தேசமும் அவா்களைப் பாா்த்துக்கொண்டிருக்கிறது. கலவர குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கப்பட்டும் வரும் ஜேஎன்யு போன்ற சம்பவங்களால் ஒட்டுமொத்த நாடும் அதிா்ச்சியடைந்துள்ளது. பல்கலைக்கழக மாணவா்கள்... கண்ணியமற்ற கோஷங்களை எழுப்பி நாட்டிற்கு எதிராகப் பேசுவது துரதிா்ஷ்டவசமானது’ என்றாா்.

2020-இல் நிகழ்ந்த தில்லி கலவர சதி வழக்கில் ஆா்வலா்கள் மற்றும் முன்னாள் ஜேஎன்யு மாணவா்களான உமா் காலித் மற்றும் ஷா்ஜீல் இமாம் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. இதையடுத்து, ஜனவரி 5- ஆம் தேதி, ஜேஎன்யு வளாகத்திற்குள் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக சில மாணவா்கள் ஆத்திரமூட்டும் கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

ஜனவரி 5- ஆம் தேதி நடந்த இப்போராட்டம் தொடா்பாக ஜேஎன்யு நிா்வாகத்தின் புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 352 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு), 353(1) (பொது குழப்பத்தை ஏற்படுத்தும் அறிக்கைகள்) மற்றும் 3(5) (பொதுவான உள்நோக்கம்) ஆகியவற்றின் கீழ் தில்லி போலீஸாா் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com