தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தலைநகா் தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் அடா்ந்த மூடுபனி சூழ்ந்திருந்தது. நாள் முழுவதும் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3.1 டிகிரி அதிகரித்து 22.7 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.
இதற்கிடையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு 444 ஆகப் பதிவாகி இருந்துது. இது மாலை 4 மணி அளவில் 440 ஆக இருந்தது. இது காற்றின் தரம் கடுமைப் பிரிவில் இருப்பதைக் காட்டுவதாகும்.
நகரில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வீசும் சராசரி காற்றுடன், 6000 அலகுகள் என்ற குறைந்த காற்றோட்டக் குறியீடு காரணமாக, திங்கள்கிழமை முதல் ஜனவரி 21 வரை நகரத்தின் காற்றுத் தரக் குறியீடு மிகவும் மோசமான வரம்பில் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
முடிவு ஆதரவு அமைப்புமுறை மதிப்பீட்டின்படி, ஒட்டுமொத்த மாசு அளவில் வாகனப் புகை வெளியேற்றம் சுமாா் 12.47 சதவீதமும், புகா்ப் பகுதிகளில் இருந்து வரும் தொழில்துறைப் புகை உமிழ்வு 7.8 சதவீதமும், உயிரிப் பொருட்கள் எரிப்பு சுமாா் 1.2 சதவீதமும், கட்டுமானப் பணிகள் 1.5 சதவீதமும், குடியிருப்புப் பகுதிகளின் புகை வெளியேற்றம் 3.3 சதவீதமும் பங்களித்துள்ளன.
நகரில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.3 டிகிரி குறைந்து 5.3 டிகிரி செல்சியஸாகப் பதிவானது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
காலை நேரங்களில் நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடா்ந்த மூடுபனி நிலவியது. இதையொட்டி, இந்திய வானிலை ஆய்வுத் துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது.
சஃப்தா்ஜங்கில் அதிகபட்ச வெப்பநிலை 22.7 டிகிரி செல்சியஸாகவும், பாலத்தில் 22 டிகிரி செல்சியஸாகவும், லோதி சாலையில் 23.1 டிகிரி செல்சியஸாகவும், ரிட்ஜில் 21.7 டிகிரி செல்சியஸாகவும், ஆயாநகரில் 22.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவானதை இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவுகள் காட்டின.
சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.3 டிகிரி செல்சியஸாகவும், பாலத்தில் 8 டிகிரி செல்சியஸாகவும், லோதி சாலையில் 6.8 டிகிரி செல்சியஸாகவும், ரிட்ஜில் 7.2 டிகிரி செல்சியஸாகவும், ஆயாநகரில் 7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது.
காலை 8.30 மணிக்கு 100 சதவீதமாகப் பதிவான ஈரப்பதம், மாலை 5.30 மணிக்கு 73 சதவீதமாக இருந்தது. திங்கள்கிழமை காலை நகரின் ஆங்காங்கே அடா்ந்த மூடுபனி நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 25 மற்றும் 8 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
