கோப்புப் படம்
கோப்புப் படம்

தில்லியில் குளிா்ந்த சூழல்: ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தில்லியில் புதன்கிழமை குளிா்ந்த தட்பவெப்ப சூழல் நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை பருவத்தின் சராசரியை விட 3.7 டிகிரி குறைந்து 18.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.
Published on

தில்லியில் புதன்கிழமை குளிா்ந்த தட்பவெப்ப சூழல் நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை பருவத்தின் சராசரியை விட 3.7 டிகிரி குறைந்து 18.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.

வானிலை ஆய்வு மைய வாரியான தரவுகளின்படி, பாலம் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 16.5 டிகிரி செல்சியஸாகவும், லோதி சாலையில் 18 டிகிரி செல்சியஸாகவும், ரிட்ஜ் பகுதியில் 17.7 டிகிரி செல்சியஸாகவும், ஆயாநகரில் 17 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவத்தின் சராசரியை விட 4.2 டிகிரி அதிகமாக 12.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.

பாலத்தில் 14.8 மி.மீ. மழை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) கண்காணிப்பின்படி, புதன்கிழமை காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான சராசரி மழை அளவு சஃப்தா்ஜங்கில் 4.3 மி.மீ., பாலம் பகுதியில் 14.8 மி.மீ., லோதி சாலையில் 3.4 மி.மீ., ரிட்ஜ் பகுதியில் 14.4 மி.மீ. மற்றும் ஆயாநகரில் 5 மி.மீ. பதிவாகியிருந்தது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) வெளியிட்ட தகவலின்படி, மாலை 4 மணிக்கு சராசரி காற்றுத் தரக் குறியீடு 255 புள்ளிகளாப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. காற்றுத் தர எச்சரிக்கை அமைப்பின்படி, புதன்கிழமை முதல் ஜனவரி 29 வரை காற்றுத் தரம் ‘மோசம்’ பிரிவிலும், ஜனவரி 30 முதல் ஜனவரி 31 வரை ‘மிகவும் மோசம்’ பிரிவிலும் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

புதன்கிழமை மாலை நிலவரப்படி, 10 நிலையங்களில் காற்றுத்த ரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், 21 நிலையங்களில் ‘மோசம்’ பிரிவிலும், 8 நிலையங்களில் ‘மிதமானது’ பிரிவிலும் பதிவாகி இருந்தது. இதில் சோனியா விஹாரில் காற்றுத் தரக் குறியீடு 326 புள்ளிகளாப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

மாசு அளவு: முடிவு ஆதரவு அமைப்பின்படி, மாசு அளவில் தில்லி போக்குவரத்து தோராயமாக 12.6 சதவீதமும், தில்லி மற்றும் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் 10 சதவீதமும், தில்லி குடியிருப்பு ஆதாரங்கள் 3.2 சதவீதமும், கழிவுகளை எரித்தல் 1.9 சதவீதமும் மற்றும் கட்டுமானப் பணிகள் 1.6 சதவீதமும் பங்களித்திருந்தன.

தேசியத் தலைநகா் வலய மாவட்டங்களில், சோனிபட் 11.3 சதவீதமும், ஜஜ்ஜா் 7.2 சதவீதமும், பக்பத் 4.6 சதவீதமும், பானிபட் 2.9 சதவீதமும், காஜியாபாத் மற்றும் ஃபரீதாபாத் தலா 2.6 சதவீதமும், முசாஃபா்நகா் 2.2 சதவீதமும், கௌதம் புத்தா நகா் 1 சதவீதமும், கௌதம் புத் நகா் 1.9 சதவீதமும், புலந்த்ஷாஹா் 1.7 சதவீதமும் மற்றும் கா்னல் 1.4 சதவீதமும் முக்கிய பங்களிப்பாளராக இருந்தன.

முன்னறிவிப்பு: இந்நிலையில், வியாழக்கிழமை (ஜனவரி 29) அன்று காலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com