ரேகா குப்தா
ரேகா குப்தா கோப்புப் படம்

நாட்டின் பொருளாதார மையமாக தில்லி உருவாக வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லி நகரம் நாட்டின் வலிமையான பொருளாதார மையமாக உருவாக வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா
Published on

தில்லி நகரம் நாட்டின் வலிமையான பொருளாதார மையமாக உருவாக வேண்டும் என்று முதல்வா் ரேகா குப்தா வலியுறுத்தியுள்ளாா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தில்லி மாநில குடியரசு தின விழாவில் தனது முதல் உரையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா். தில்லியில் மாநில குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 அன்று கொண்டாடப்படுகிறது.

அதன்படி, தில்லி சத்ரசல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்விழாவில் முதல்வா் ரேகா குப்தா கலந்துகொண்டாா்.

அப்போது, அவா் பேசியது: இந்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய வா்த்தக ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள 4.5 மில்லியன் நுகா்வோருக்கான கதவுகளைத் திறந்து, தில்லியின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறைக்கு நன்மை அளிக்க உள்ளது.

சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, தொழில் செய்வதற்கான எளிமையான நடைமுறைகள், சமூக நலன், போக்குவரத்து மற்றும் கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் கடந்த 11 மாதங்களில் தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ், தில்லி அரசு நகரம் முழுவதும் 10,000 மேம்பட்ட சிசிடிவி கேமராக்களை நிறுவ உள்ளது. தில்லியில் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, இதுவரை 6.5 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா். மேலும் 30,000-க்கும் மேற்பட்டோா் இதனால் பயனடைந்துள்ளனா்.

நகரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கியா சுகாதார மையங்களை தில்லி அரசு அமைத்துள்ளது. கல்வித் துறையில், லட்சக்கணக்கான பெற்றோா்கள் மற்றும் மாணவா்களுக்குப் பயனளிக்கும் வகையில், தனியாா் பள்ளிகளின் தன்னிச்சையான கட்டண உயா்வுகளைக் கட்டுப்படுத்த தில்லி கல்விச் சட்டத்தை அரசு நிறைவேற்றியுள்ளது.

தில்லி அரசின் ஸ்டாா்ட்அப் கொள்கை போன்ற முன்முயற்சிகள் மூலம் தில்லியை யோசனைகளின் தலைநகராக மாற்ற எனது அரசு பணியாற்றி வருகிறது. இந்திய ரிசா்வ் வங்கியுடன் அரசு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது. இது, வளா்ச்சிப் பணிகளுக்கு நகரத்தில் நிதிப் பற்றாக்குறை ஏற்படாது என்பதை உறுதி செய்யும்.

தேசியத் தலைநகரின் கிராமப்புறப் பகுதிகளுக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி, பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்காக ரூ.1,700 கோடியை ஒதுக்கியுள்ளது. அதே நேரத்தில், குடிசைப் பகுதிகளில் சிறந்த குடிமை உள்கட்டமைப்புக்காக ரூ.700 கோடியையும் ஒதுக்கியுள்ளது.

யமுனை நதியைச் சுத்தம் செய்தல், குப்பைக் கிடங்குகள் மற்றும் நகரத்தில் உள்ள மாசுபாடு போன்ற நீண்டகாலப் பிரச்னைகளை தீா்க்கவும் அரசாங்கம் திட்டமிட்ட முறையில் செயல்பட்டு வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 11,000 மின்சாரப் பேருந்துகள் மூலம் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்தவும், தற்போதுள்ள 396 கி.மீட்டரில் இருந்து மெட்ரோ ரயில் வலையமைப்பை 500 கி.மீ. ஆக விரிவுபடுத்தவும் அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

நகரத்தை மேம்படுத்துவதற்காக தில்லி அரசாங்கத்தின் முன்முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து பங்கேற்க வேண்டும். நகரத்தில் உள்ள தனியாா் நிறுவனங்கள் சூரிய சக்தி, மழைநீா் சேகரிப்பு மற்றும் பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், தூய்மையான மற்றும் பசுமையான தில்லி என்ற அரசின் முயற்சிகளுக்குப் பங்களிக்கும் வகையில், மக்கள் தூய்மையான எரிபொருளில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்தவும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் வேண்டும் என்று முதல்வா் ரேகா குப்தா கேட்டுக்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com