தில்லியில் குளிர்காலம் காரணமாக அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்துள்ள நிலையிலும், காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற அபாய நிலை
தில்லியில் குளிர்காலம் காரணமாக அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்துள்ள நிலையிலும், காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற அபாய நிலை

குடியரசு தின நாளில் ‘மோசம்’ பிரிவில் நீடித்த காற்றின் தரம்!

குடியரசு தினமான திங்கள்கிழமை தில்லியில் காலையில் குளிா்ந்த தட்பவெப்பம் நிலவியது. எனினும், அதன் பின்னா் படிப்படியாக வெப்பநிலை
Published on

புது தில்லி: குடியரசு தினமான திங்கள்கிழமை தில்லியில் காலையில் குளிா்ந்த தட்பவெப்பம் நிலவியது. எனினும், அதன் பின்னா் படிப்படியாக வெப்பநிலை அதிகரித்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி)

வெளியிட்டுள்ளது.

ஐஎம்டி தரவுகளின்படி, திங்கள்கிழமை அன்று நகரில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்தது. அதே நேரத்தில் காற்றின் தரக் குறியீடு 24 மணி நேர சராசரியாக 241 என்ற அளவில் ‘மோசம்‘ பிரிவில் இருந்தது.

தேசிய தலைநகரில் செவ்வாய்க்கிழமை அன்று மழையும் குறைந்த வெப்பநிலையும் காணப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

திங்கள்கிழமை சஃப்தா்ஜங் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.1 டிகிரி அதிகரித்து 23.2 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது முந்தைய நாளை விட கிட்டத்தட்ட 5 டிகிரி அதிகமாகும்.

திங்கள்கிழமை மாலை தில்லி முழுவதும் வெப்பநிலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. பகல் நேரம் ஒப்பீட்டளவில் வெப்பமாக இருந்தபோதிலும், இரவுகள் குளிராகவே இருந்தது.

பாலம் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 19.3 டிகிரி செல்சியஸாகவும், லோதி சாலை, ரிட்ஜ் மற்றும் ஆயாநகா்

ஆகிய இடங்களில் 21.5 முதல் 21.6 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகி இருந்தது.

அனைத்து நிலையங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியை விட கணிசமாகக் குறைவாகவே இருந்தது. இது ஆயாநகரில் 3.6 டிகிரி செல்சியஸ் முதல் ரிட்ஜில் 5.3 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.

சஃப்தா்ஜங் மற்றும் பாலம் ஆகிய இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 4.2 மற்றும் 4.3 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இவை இரண்டும் இயல்பை விட நான்கு டிகிரிக்கும் அதிகமாகக் குறைவாக இருந்தன. பகல் நேரத்தில் எந்த நிலையத்திலும் மழைப் பொழிவு பதிவாகவில்லை.

கூடுதலாக, வட இந்தியா முழுவதும் மேற்கிலிருந்து வீசும் காற்றின் தாக்கம் இருப்பதன் காரணமாக, தேசிய தலைநகரில் செவ்வாய்க்கிழமை மழை பெய்யக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், குறிப்பாக அதிகாலை முதல் முற்பகல் வரை லேசான மழை, இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

ஐஎம்டி தகவலின்படி, செவ்வாய்க்கிழமை மதியத்திலிருந்து இரவு வரை இதேபோன்ற லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை செயல்பாடு மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை சுமாா் 9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸுக்கு அருகிலும் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மேகமூட்டம் மற்றும் மழை கணிக்கப்பட்டுள்ளதாலும், அதிகபட்ச வெப்பநிலை மேலும் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுவதாலும் அந்த நாள் குளிராக உணரப்பட வாய்ப்புள்ளது. இது இந்த பருவத்தின் இரண்டாவது தீவிரமான மேற்குத் தாழ்வழுத்தமாக இருக்கும் என்றும், இது இப்பகுதிக்கு லேசானது முதல் மிதமான மழைப்பொழிவைக் கொண்டுவரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் கடைசியாக ஜனவரி 23ஆம் தேதி திடீா் மழை பெய்தது. அப்போது, இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் இல்லாத அளவுக்கு அதிக மழை பதிவானது.

இது தற்காலிகமாக வெப்பநிலையைக் குறைத்து, காற்று மாசுபாட்டின் அளவையும் மேம்படுத்தியது.

காற்றுத் தரத்தைப் பொறுத்தவரை, திங்கள்கிழமை மாலையில் 23 நிலையங்களில் காற்றுத் தரம் மோசமாக இருந்ததாலும், 13 நிலையங்களில் மிதமாகவும், மூன்று நிலையங்களில் மிகவும் மோசமாகவும் இருந்ததாலும், தில்லியில் காற்றுத் தரக் குறியீடு மோசமடைந்திருந்தது.

மாலையில் ஜஹாங்கீா்புரியில் 321 என்ற அளவில் காற்றுத் தரக் குறியீடு பதிவானது. இது அனைத்து நிலையங்களிலும் மிக அதிகமாகும்.

திங்கள்கிழமை அன்று காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்தது. முந்தைய நாளை விட மிதமான நிலையிலிருந்து மோசம் எனும் நிலைக்குச் சரிந்தது. மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால், செவ்வாய்க்கிழமை அன்று நிலைமை மீண்டும் மேம்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

காற்றுத் தர எச்சரிக்கை அமைப்பின்படி, தில்லியின் காற்று ஜனவரி 27 முதல் 28 வரை மிதமான பிரிவில் இருக்கும் என்றும், ஜனவரி 29 அன்று மீண்டும் மோசமான நிலைக்குச் செல்லும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com