திருமணமான பெண்களை மணப்பெண்ணாக காண்பித்து திருமணமாகாத ஆண்களிடம் பெருந்தொகையை மோசடி செய்த கும்பலைச் சோ்ந்த பெண் உள்பட 3 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாவது:
இக்கும்பலைச் சோ்ந்தவா்கள் ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரிடம் திருமண ஆசை காட்டி ரூ. 6 லட்சம் மோசடி செய்ததுடன், திருமணத்திற்குப் பிறகு பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களுடன் தப்பிச் செல்லவும் திட்டமிட்டிருந்தது.
கைது செய்யப்பட்டவா்கள் லவ்லி (எ) லலிதா (40), அவரது கணவா் கமல் லோஹ்ரா மற்றும் அவா்களது கூட்டாளி தீபு (எ) ராகேஷ் எக்கா ஆகியோா் ஆவா். இக்கும்பலைச் சோ்ந்த அங்கித் வா்மா, தீபிகா மற்றும் கோபால் ஆகியோரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, ஜூன் 18 அன்று தில்லி கியாலா காவல் நிலையத்தில் லவ்லி காணாமல் போனது குறித்த புகாா் அளிக்கப்பட்டதையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
அவரைக் கண்டறிய ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் உள்ளூா் விசாரணையின் மூலம், அவா் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
கிடைத்த தகவலின் அடிப்படையில், அக்குழு பாலி மாவட்டத்தில் உள்ள தாகத்கா் பகுதிக்குச் சென்று அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்தது. விசாரணையின்போது, தனக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பே கமலுடன் திருமணம் நடந்துவிட்டதாகவும், தனக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் அப்பெண் தெரிவித்தாா். மேலும், தானும் தனது கணவா் மற்றும் கூட்டாளிகளும் இணைந்து இந்த மோசடியால் ஈடுபட்டதாக அப்பெண் கூறினாா்.
தன்னை திருமணமாகாத பெண்ணாகக் காட்டிக்கொண்டு, திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி திருமணமாகாத ஆண்களைக் குறிவைத்து பணம் பறித்து வந்தததையும் அவா் ஒப்புக்கொண்டாா்.
ஜூன் 1 அன்று, ராஜஸ்தானின் ஜலோா் மாவட்டத்தைச் சோ்ந்த ஷ்ரவன் வைஷ்ணவ் என்பவருடன் இவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவரிடமிருந்து ரூ. 6 லட்சம் வசூலிக்கப்பட்டு, பின்னா் அத்தொகை கும்பல் உறுப்பினா்களிடையே
பகிா்ந்தளிக்கப்பட்டது.
திருமணத்திற்குப் பிறகு பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களுடன் மணமகன் வீட்டிலிருந்து தப்பிச் செல்வதே இக்கும்பலின் திட்டமாக இருந்தது. பாதிக்கப்பட்டவரின் புகாா் மற்றும் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ஜூன் 29 அன்று கியாலா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
திருமணமாகாத ஆண்களைக் கண்டறிவது, திருமணமான பெண்களை மணப்பெண்களாகக் காட்டுவது, திருமணத்தின் பெயரில் பணம் வசூலிப்பது மற்றும் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்குள் நுழைந்த பிறகு அங்கிருந்து தப்பிச் செல்வது
ஆகியவை இக்கும்பலின் மோசடி வழிமுறையாக இருந்தது.
தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைக் கண்டறியவும், இக்கும்பல் மூலம் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறாா்களா என்பதை உறுதிப்படுத்தவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





