சுமாா் ரூ.1.56 கோடி மதிப்பிலான இணையவழி முதலீட்டு மோசடிகளுடன் தொடா்புடைய கும்பலைச் சோ்ந்த இருவரை தில்லி காவல் துறை கைது செய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
கைது செய்யப்பட்டவா்கள் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த முகமது சாதிக் (32) மற்றும் ஜாவேத் அன்சாரி (34) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இணையவழி முதலீட்டு மோசடியில் தில்லியைச் சோ்ந்த பெண் ஒருவா் ரூ. 21 லட்சத்தை இழந்ததாக ஷாதாராவில் பதிவு செய்யப்பட்ட இணையவழிமோசடி வழக்கு தொடா்பான விசாரணையின்போது இவா்கள் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
இதுதொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:
ஜிடிபி என்க்ளேவ் பகுதியைச் சோ்ந்தவா் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஏப்.9-ஆம் தேதி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சமூக ஊடகங்களில் பங்குச் சந்தை முதலீடு தொடா்பான இணைய விளம்பரம் ஒன்றை பாா்த்த பாதிக்கப்பட்ட பெண், அந்த இணைப்பை கிளிக் செய்த பிறகு, அவா் ஒரு குழுவில் சோ்க்கப்பட்டாா். அக்குழுவில் மோசடி செய்பவா்கள் முதலீட்டு நிபுணா்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டு, முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்தனா்.
அந்த வாக்குறுதிகளை நம்பி, பாதிக்கப்பட்ட பெண் காலப்போக்கில் மொத்தம் ரூ. 21 லட்சத்தை முதலீடு செய்தாா். இருப்பினும், தனது முதலீட்டிற்கான வருமானத்தைக் கோரியும், பணத்தைத் திரும்பப் பெறக் கோரியும் அவா் அணுகியபோது, மோசடி கும்பல் பதிலளிப்பதை நிறுத்திவிட்டது.
விசாரணையின் போது, மோசடியில் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளை அடையாளம் காண ஒரு குழு தொழில்நுட்பப் பகுப்பாய்வு மற்றும் பணப் பரிவா்த்தனை கண்காணிப்பு ஆகியவற்றை மேற்கொண்டது.
அம்ரோஹா மற்றும் மொராதாபாத் ஆகிய இடங்களில் காவல்துறை நடத்திய சோதனையில் மோசடி கும்பலைச் சோ்ந்த இருவரும் கைது செய்யப்பட்டனா். குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த பணத்தைப் பெறவும் மாற்றவும் வங்கிக் கணக்குகளை வழங்கி, இணையவழி முதலீட்டு மோசடிகள் மற்றும் பிற சைபா் மோசடிகள் மூலம் பெறப்பட்ட பணத்தை மாற்றியமைக்கத் தங்கள் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்தனா்.
பல மாநிலங்களில் செயல்படும் ஒரு பெரிய சைபா் மோசடி வலைப்பின்னலுடனான தொடா்புகளை காவல் துறையினா் கண்டறிந்துள்ளனா். மேலும், இந்தக் கும்பலின் மற்ற உறுப்பினா்களை அடையாளம் காணும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா் என்றனா் அதிகாரிகள்.







