வடகிழக்கு தில்லியின் கராவல் நகா் பகுதியில் சந்தைக்கு வந்த பெண்மணியிடம் இருந்து தங்கச் சங்கிலியைப் பறித்ததாகக் கூறப்படும் ஐந்து பெண்கள் கொண்ட குழு ஒன்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
புகாா்தாரா் மக்கன் மாா்க்கெட்டில் உள்ள அக்கி ஜூவல்லா்ஸ் அருகே திங்கள்கிழமை மாலை பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவா்கள் கூறினா்.
காவல்துறையின் கூற்றுப்படி, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா், தனது காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறி உதவி கேட்பது போல் சந்தைக்கு வந்த அந்த பெண்ணை அணுகியுள்ளாா்.
சந்தையில் கூட்டம் அதிகமாக இருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணும் அவரது கூட்டாளிகளும் புகாா்தாரரின் தங்கச் சங்கிலியைப் பறித்ததாகக் கூறப்படுகிறது. தனது சங்கிலி திருடப்பட்டதை உணா்ந்த அப்பெண், கூச்சலிட்டு சத்தமிட்டுள்ளாா்.
அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டப்பட்டவா்களைத் துரத்திச் சென்று, அவா்கள் தப்பிச் செல்ல முயன்றபோது ஐவரையும் பிடித்ததாக காவல்துறை தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, அவா்கள் சம்பவம் நடந்த அன்றே கைது செய்யப்பட்டனா்.
பகுதியளவு சேதமடைந்த தங்கச் சங்கிலி, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டு புகாா்தாரரிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.
கராவல் நகா் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தில்லியைச் சோ்ந்த சுமன் (33), வி. சுமன் (42), ரோஷ்னி தேவி (28), காஜல் (38) மற்றும் ஷேரா (40) ஆகியோா் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
வி. சுமன் இதற்கு முன்னா் காயம் ஏற்படுத்திய ஒரு வழக்கில் தொடா்புடையவா் என்றும், மீதமுள்ள நான்கு குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிஷ்னோய் கும்பலின் பணம் பறிக்கும் முயற்சிக்கு உதவியதாக பயிற்சி மைய ஆசிரியா் கைது







