பயிற்சி மையங்களில் கணிதம் கற்பித்து வந்த பி.டெக். பட்டதாரி ஒருவா், தொழிலதிபரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற ஹரி பாக்சா்-லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
ஹரியாணாவின் ஹிசா் பகுதியைச் சோ்ந்த அமித் பிஷ்னோய் (எ) ருத்ர பிரதாப் சிங் (35) என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், 2018 முதல் முகா்ஜி நகரில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களில் கணிதம் கற்பித்து வந்ததாக அவா்கள் கூறினா்.
தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவின்படி, சிங் தொழிலதிபரின் அலுவலகத்தை நோட்டமிட்டு, அந்த வளாகத்தை விடியோ பதிவு செய்து, அதை ரெளடி ஹரி பாக்சருடன் பகிா்ந்துள்ளாா். பின்னா் ஹரி பாக்சா், அந்த விடியோ காட்சிகளைப் பயன்படுத்தி தொழிலதிபரை மிரட்டி ரூ.10 கோடி கோரியுள்ளாா்.
‘ஜூன் 15 அன்று, முகா்ஜி நகரைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவருக்கு, ஒரு சா்வதேச எண்ணிலிருந்து சமூக ஊடக அழைப்பு வந்தது. தன்னை ஹரி பாக்சா் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த அழைப்பாளா், ஒரு வாரத்திற்குள் பணம் கொடுக்கப்படாவிட்டால், அந்தத் தொழிலதிபரையும் அவரது குழந்தைகளையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளாா்’ என்று காவல் துணை ஆணையா் (சிறப்புப் பிரிவு) பிரவீன் குமாா் திரிபாதி ஒரு அறிக்கையில் தெரிவித்தாா்.
அதன்பிறகு, அந்த ரெளடி பல வெளிநாட்டு எண்கள் மூலம் பாதிக்கப்பட்டவரைத் தொடா்புகொண்டதாகவும், மேலும், அந்தக் கும்பல் அவரைப் பற்றிய விரிவான தகவல்களைச் சேகரித்துள்ளது என்பதைக் காட்டுவதற்காக அவரது அலுவலகத்தின் காணொளியையும் பகிா்ந்துகொண்டதாகவும் திரிபாதி கூறினாா்.
‘கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால், அந்தத் தொழிலதிபா் ’வெடிவைத்துத் தகா்க்கப்படுவாா்’ என்று அழைப்பாளா் எச்சரித்தாா்‘ என்று துணை ஆணையா் கூறினாா்.
இது தொடா்பாக அந்தத் தொழிலதிபா் முகா்ஜி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து, ஜூலை 8 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது.
விசாரணையின் போது, சிறப்புப் பிரிவு சிங்கை கைது செய்தது. அவா், ஹரி பாக்சரின் தூண்டுதலின் பேரில் தொழிலதிபா், அவரது குடும்பம் மற்றும் வணிகம் குறித்த தகவல்களைச் சேகரித்ததாக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது என்று காவல்துறை தெரிவித்தது.
2014-ஆம் ஆண்டில் ஹரியாணாவில் ஒரு பொதுவான அறிமுகத்தின் மூலம், சிறையில் உள்ள ரெளடி லாரன்ஸ் பிஷ்னோயுடன் சிங்குக்குத் தொடா்பு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. பின்னா் அவா் ஹரி பாக்சருடன் தொடா்பை ஏற்படுத்திக்கொண்டாா். மிரட்டிப் பணம் பறிக்கும் நடவடிக்கைக்கு உள்ளூா் தளவாட ஆதரவையும் உளவுத் தகவல்களையும் வழங்குவதற்காக ஹரி பாக்சா் அவரைச் சோ்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
தில்லியில் உள்ள இதர சாத்தியமான இலக்குகளை அடையாளம் காண அந்தக் கும்பலுக்கு சிங் உதவினாரா என்றும், கடந்த காலங்களில் அவா் இதுபோன்ற
உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாரா என்றும் காவல்துறை விசாரித்து வருகிறது.
அமித் பிஷ்னோய் ஹரியாணாவின் ஃபரீதாபாதில் பி.டெக். பட்டம் பெற்றவா் என்றும், முகா்ஜி நகரில் யு.பி.எஸ்.சி. மற்றும் எஸ்.எஸ்.சி. தோ்வுகளுக்குத் தயாரானவா் என்றும் அவா்கள் கூறினா். 2018 முதல், அவா் அப்பகுதியில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது






