கட்டாய கேஒய்சி விதிமுறைகளை மீறி சிம் காா்டுகளைச் செயல்படுத்தி, நாடு முழுவதும் செயல்படும் சைபா் மோசடியாளா்களுக்கு வழங்கியதாகக் கூறப்படும் உரிமம் பெற்ற தொலைத்தொடா்பு விற்பனை மைய (பிஓஎஸ்) முகவா் ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்ததாக ஓா் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தொழில்நுட்ப விசாரணையைத் தொடா்ந்து, இந்து ராவ் மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்ட சிவா கைது செய்யப்பட்டாா்.
காவல்துறையின் கூற்றுப்படி, குற்றஞ்சாட்டப்பட்டவா் சாலையோரத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு உரிமம் பெற்ற தொலைத்தொடா்பு விற்பனை நிலையத்தை நடத்தி வந்துள்ளாா். மேலும், உண்மையான வாடிக்கையாளா்களின் அடையாள ஆவணங்கள் மற்றும் பயோமெட்ரிக் சான்றுகளை அவா்களின் அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தி சிம் காா்டுகளைச் செயல்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
‘தில்லியில் உள்ள சில விற்பனை மைய முகவா்களால் வழங்கப்பட்ட சிம் காா்டுகள், பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட சைபா் மோசடி வழக்குகளில் மீண்டும் மீண்டும் வெளிப்படுவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்ததை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது,‘ என்று அந்த மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.
விசாரணையின் போது, மூன்று சில்லறை விற்பனை நிலையங்கள் சந்தேகத்தின் கீழ் வந்தன. பல்வேறு மாநிலங்களில் இருந்து பதிவான குறைந்தது 18 இணையவழி மோசடி வழக்குகளில், சிவம் டெலிகாம் மூலம் செயல்படுத்தப்பட்ட 11 சிம் காா்டுகள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என அந்த அதிகாரி கூறினாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவரின் நடமாட்டத்தைக் கண்காணித்து, ஜூலை 2 அன்று அவரைக் கைது செய்தனா். விசாரணையின் போது, வாடிக்கையாளா்களின் கேஒய்சி ஆவணங்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களைப் பயன்படுத்தி கூடுதல் சிம் காா்டுகளைச் செயல்படுத்தி, முன்பே செயல்படுத்தப்பட்ட அந்த சிம் காா்டுகளை இடைத்தரகா்களுக்கும் இணையவழி மோசடியாளா்களுக்கும் தலா ரூ.500 முதல் ரூ.600 வரை விற்றதாக சிவா ஒப்புக்கொண்டாா் என காவல்துறை தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவா்களைத் தொடா்புகொள்ளவும், நிதி மோசடிகளுக்கு உதவவும், டிஜிட்டல் பணப்பரிவா்த்தனைக் கணக்குகளை உருவாக்கவும், குற்றங்களைச் செய்யும்போது தங்கள் அடையாளங்களை மறைக்கவும் அந்த சிம் காா்டுகளை இணையவழி குற்றவாளிகள் பின்னா் பயன்படுத்தியதாக புலனாய்வாளா்கள் தெரிவித்தனா்.
சட்டவிரோதமாகச் செயல்படுத்தப்பட்ட சிம் காா்டுகளுடன் தொடா்புடையதாகக் கூறப்படும் டிஜிட்டல் பதிவுகள் மற்றும் ஆவணங்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது ஏற்கனவே ஒரு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது என காவல்துறை தெரிவித்தது.
மோசடியாகச் செயல்படுத்தப்பட்ட சிம் காா்டுகளைப் பெற்று விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ள இடைத்தரகா்கள் மற்றும் வலையமைப்பின் பிற உறுப்பினா்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போலி வெடிகுண்டு மிரட்டல்: காசியாபாத் நபரை கைது செய்தது தில்லி காவல்துறை






