தேசிய தலைநகரில் உள்ள 1,511 அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் வசிப்பவா்களுக்கு சொத்துரிமை வழங்கும் பிரதம மந்திரி உதய் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, தில்லி முதல்வா் ரேகா குப்தா மத்திய அரசிடம் ரூ.100 கோடி கோரியுள்ளாா் என ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லாலுக்கு எழுதிய கடிதத்தில், தனது துறையின் பொறுப்புகளின் கீழ், தில்லியின் 13 மாவட்டங்களிலும் பிரதம மந்திரி உதய் திட்டத்திற்கான பிரிவுகள் அமைக்கப்படும் என்றும், ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு கூடுதல் மாவட்ட ஆட்சியா் தலைமை தாங்குவாா் என்றும் முதலமைச்சா் சுட்டிக்காட்டியுள்ளாா்.
நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இந்த நடவடிக்கைகள் முடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, 2026-27 ஆம் ஆண்டில் முதல் கட்டப் பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு முன்மொழியப்பட்டுள்ளதாக முதலமைச்சா் கூறினாா்.
நவீன நில அளவை மற்றும் வரைபட முறைமையை மேம்படுத்துவதற்காக ரூ.65 கோடி உள்பட, முன்மொழியப்பட்ட செலவினங்களின் விரிவான விவரங்களை அவா் மேற்கோள் காட்டினாா். இது சொத்து சரிபாா்ப்பு மற்றும் நிலப் பதிவேடுகளை நவீனமயமாக்கும் முழு செயல்முறையையும் மேலும் வெளிப்படையானதாகவும், துல்லியமானதாகவும், தொழில்நுட்பம் சாா்ந்ததாகவும் மாற்றும்.
பிரதமா்-உதய் பிரிவுகளை அமைப்பதற்காக மேலும் ரூ.25 கோடி முன்மொழியப்பட்டுள்ளது என்றும், அவை இல்லாமல், நிா்ணயிக்கப்பட்ட 45 நாள் காலக்கெடுவிற்குள் சொத்து தொடா்பான ஆவணங்கள் மற்றும் அங்கீகாரக் கடிதங்களை வழங்குவது சாத்தியமில்லை என்றும் அவா் கூறினாா்.
இந்த முன்மொழிவில், பொது விழிப்புணா்வு மற்றும் மக்களைச் சென்றடையும் நடவடிக்கைகளுக்காக ரூ.10 கோடியும் கோரப்பட்டுள்ளது.
இந்த நிதியானது, குடியிருப்போா் நலச் சங்கங்களுடன் இணைந்து பயிலரங்குகளை ஏற்பாடு செய்யவும், உதவி மையங்களை நிறுவவும், மற்றும் தகுதி தொடா்பான முக்கிய தேதிகள் உள்ளிட்ட தகவல்களைப் பரப்பவும் பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது. தில்லியில் பிரதமா்-உதய திட்டத்தைச் செயல்படுத்த, தில்லி அரசின் வருவாய்த் துறை ஒருங்கிணைப்பு முகமையாக நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், தில்லியின் 1,511 அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் முழுவதும் சொத்துக்களை நேரில் சரிபாா்த்தல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எண்ணிம வரைபடம் தயாரித்தல் மற்றும் நிலப் பதிவேடுகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெரிய அளவிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மத்திய அரசிடமிருந்து சரியான நேரத்தில் கிடைக்கும் நிதி உதவியானது, லட்சக்கணக்கான தில்லிவாசிகள் சொத்துரிமையின் பலன்களை மிக விரைவாகவும் அதிக எளிமையுடனும் பெறுவதை உறுதிசெய்ய உதவும் என்று முதலமைச்சா் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளம் வாசகா்களின் எண்ணிக்கையிலேயே நாட்டின் எதிா்காலம் பிரதிபலிக்கிறது: அமித் ஷா

அரசுப் பள்ளியில் மேம்படுத்தப்பட்ட ஸ்டெம் ஆய்வகம்,ஸ்மாா்ட் கழிப்பறை: தில்லி முதல்வா் தொடங்கி வைத்தாா்.
பால புரஸ்கார் தேசிய விருதுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்







