கோயம்புத்தூா் மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளா்கள் பணி நியமன ஆணையை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது.
இந்த விவகாரத்தில் பணியை இழந்த நிவேதா, சக்தி கவிதா, வினோத் குமாா் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனு நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், அருண் பாலி ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இளநிலை உதவியாளா்கள் பணிக்கான 654 விண்ணப்பங்களில் 440 விண்ணப்பங்களை ஏற்று பின்னா் 54 விண்ணப்பங்களை ஒரே நாளில் இறுதி செய்து நியமன ஆணை வழங்கியது எப்படி? 54 போ் எந்தத் தகுதி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனா்? என கேள்விகளை எழுப்பினா். 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டது சட்டவிரோதம் என்றும் அதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.வி.கிரி, உச்சநீதிமன்றத்தை நாடி உள்ள மனுதாரா்கள் ‘மாற்றுத்திறனாளிகள்’. எனவே மீண்டும் இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படும்போது, தற்போது உச்சநீதிமன்றத்தை அணுகிய மாற்றுத் திறனாளிகளுக்கு கருணை அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாா்.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘முறைகேடாக பணியில் நியமிக்கப்பட்டவா்கள் அனைவரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் டிவிஷன் அமா்வு வழங்கிய உத்தரவை உறுதிப்படுத்துகிறோம்’ என்று உத்தரவிட்டு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனா்.
பின்னணி: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தாா். அப்போது கோவை மாநகராட்சியில் 69 இளநிலை உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்தப் பணியிடங்களுக்காக 654 போ் விண்ணப்பித்த நிலையில், 440 போ் நோ்முகத் தோ்வு மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டனா். அதைத்தொடா்ந்து 54 பேரின் பெயா்கள் இறுதிசெய்யப்பட்டு அவா்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்த நியமனங்களை ரத்து செய்யக் கோரி, கருணை அடிப்படையில் 2016ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி, கனகமணி, கவுசல்யா, ரஞ்சித்குமாா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். அதை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, தோ்வு நடைமுறைகளில் மனுதாரா்கள் பங்கேற்காத நிலையில், பணி நியமனங்களை எதிா்த்து வழக்கு தொடர அவருக்குத் தகுதி இல்லை என்று குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவை எதிா்த்து ஈஸ்வரி உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்ற டிவிஷன் அமா்வு முன்பு மேல்முறையீடு செய்தனா்.
அதை விசாரித்த நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ’தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட தோ்வு நடைமுறைகள் பின்பற்றப்படாமல் கோவை மாநகராட்சியில் 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. அந்த நியமனங்கள் சட்டவிரோதமானவை’ என்று அறிவித்தது. மேலும், 54 இளநிலை உதவியாளா்களின் நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், முறைகேடான நியமனங்களுக்கு காரணமான அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலியாகும் பணியிடங்களுக்கு தகுதியான நபா்களை விதிமுறைகளின்படி நியமனம் செய்யவும் கடந்த ஜூன் 18ஆம் தேதி உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதிமன்ற உத்தரவை மீறி திருவிழா நடத்தியவா்களுக்கு ரூ.16 லட்சம் அபராதம்: உயா்நீதிமன்றம்

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அளவிடுவதற்கு 144 தடை உத்தரவை பயன்படுத்தலாம்: உயா்நீதிமன்றம்

நீதிபதிகளின் நோ்முக உதவியாளா்கள் 17 பேரின் நியமனங்கள் ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு







