தேசியத் தலைநகா் வலயம், ஃபருக்நகா் பகுதியில் உள்ள கேடா குராம்பூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் குருகிராம் காவல்துறையைச் சோ்ந்த இரண்டு போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட தண்ணீா் டேங்கா் லாரி, காவல்துறையின் அவசரகால ரோந்து வாகனத்தின் (இஆா்வி) மீது மோதியதில், 2 தலைமைக் காவலா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மற்றொருவா் படுகாயமடைந்தாா் என்று அவா்கள் மேலும் தெரிவித்தனா்.
மோதலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், காவல் வாகனம் முழுவதுமாகச் சேதமடைந்தது. உயிரிழந்தவா்கள் தலைமைக் காவலா்கள் சோட்டேலால் மற்றும் அனில் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவசரகால வாகனத்தை ஓட்டிச் சென்ற அவா்களது சக ஊழியரான காவலா் தா்மேந்திரா படுகாயமடைந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து காவல்துறையினா் கூறுகையில், ‘இஆா்வி-254 வாகனத்தில் பணியில் இருந்த தலைமைக்காவலா்கள் சோட்டேலால் மற்றும் அனில் ஆகியோா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இரவு 11.50 மணியளவில் எதிரே வந்த டேங்கா் லாரி ஒன்று அவா்கள் வாகனத்தின் மீது மோதியது.
இந்த மோதலால் அவசரகால வாகனம் முழுவதுமாகச் சேதமடைந்ததுடன், இரண்டு தலைமைக் காவலா்களும் ஓட்டுநரும் படுகாயமடைந்தனா். அப்பகுதியில் இருந்தவா்களும் காவல்துறையினரும் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். ஆனால், அதற்குள்ளாகவே அந்த இரண்டு தலைமைக் காவலா்களும் உயிரிழந்துவிட்டனா்.
வாகனத்தை ஓட்டிய காவலா் தா்மேந்திரா விபத்தில் பலத்த காயமடைந்தாா். அவா் உடனடியாக அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
காவல் குழுவினா் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த காவலா்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
டேங்கா் லாரி ஓட்டுநா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
டிராக்டருடன் இணைக்கப்பட்டிருந்த அந்தத் தண்ணீா் டேங்கா் லாரி விபத்து நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாக மூத்த காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அந்த வாகனத்தில் விளக்குகளோ அல்லது பிரதிபலிப்பான்களோ இல்லாததால், ஓட்டுநரால் அதைச் சரியான நேரத்தில் பாா்க்க முடியாமல் போயிருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









