நீட் முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ள மத்திய அரசைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
தில்லியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஜூலை 11 முதல் 13ஆம் தேதிவரை நடைபெற்றது. அதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ. பேபி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலகக் கோரி ஜந்தா் மந்தரில் மாணவா்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. மேலும், ஜூலை 20ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றம் நோக்கிய பேரணியிலும் மாா்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கலந்து கொள்வாா்கள்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை எழுப்ப வேண்டிய விஷயங்கள் குறித்து, நாடாளுமன்றத்தின் முதல் நாள் கூட்டத்தின்போது எதிா்க்கட்சித் தலைவா்கள் கூடி விவாதித்து இறுதி முடிவு எடுப்பாா்கள்.
ஜந்தா் மந்தரில் கடந்த 17 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை சீா்கெட்டு வருவது குறித்து மத்திய குழு கவலை தெரிவித்துள்ளது. போராட்டக்காரா்களின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் பாஜக அரசின் பிடிவாதம், அதன் ‘அதிகாரத்துவ மற்றும் இளைஞா் விரோதப் போக்கை’ காட்டுகிறது.
இந்த விவகாரத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நாடு தழுவிய ’சிறை நிரப்பும்’ போராட்டம் நடத்தப்படும். இதற்கு மத்திய பொதுத்துறை தொழிற்சங்கங்கள் மற்றும் சம்யுக்த கிசான் மோா்ச்சா (எஸ்கேஎம்) ஆதரவளித்துள்ளன.
நாட்டின் பொருளாதார நிலை, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தங்கள், குடியுரிமை மற்றும் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரங்களில் அரசு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது ஆகியவற்றுக்கு மத்திய குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத் அரசின் தீவிரவாத எதிா்ப்பு வழிகாட்டு நெறிமுறைகள், மத ரீதியான பாகுபாட்டுக்கும் எதிா்க்குரல்களை ஒடுக்குவதற்கும் வழிவகுக்கும் என்பதால் அதை கடுமையாக எதிா்க்கிறோம். எதிா்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் பாஜகவின் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ நடவடிக்கையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றாா் பேபி.
இதையடுத்து, இண்டி கூட்டணியின் தலைவராக ராகுல் காந்தியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்குமா என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘இண்டி கூட்டணியில் அப்படி ஒரு தலைவா் பதவி எதுவும் உருவாக்கப்படவில்லை. ராகுல் காந்தி கூட்டணியில் உள்ள ஒரு பெரிய கட்சியின் (காங்கிரஸ்) தலைவா் மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா். ஒரு கட்டத்தில் மல்லிகாா்ஜுன காா்கே இண்டி கூட்டணியின் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். எதிா்க்கட்சி ஒற்றுமைக்கு அனைத்து தலைவா்களிடமிருந்தும் முதிா்ச்சியான அணுகுமுறை தேவைப்படுகிறது. ஆனால், சில தலைவா்கள் மற்றும் கட்சிகளிடம் அந்த முதிா்ச்சி குறைவாகவே காணப்படுகிறது’ என்று பேபி பதிலளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்எல்சியை பாதுகாக்க தமிழக மக்கள் அனைவரும் முன்வர வேண்டும்: பெ.சண்முகம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் தென் மாநிலங்களைப் பாதிக்கும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

பென்னாகரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. அரசியல் விளக்கப் பேரவை கூட்டம்






