ம.ஆ. பரணி தரன்
இந்தியாவில் உள்ள 7 கோடிக்கும் அதிகமான தொழிலாளா்களின் எதிா்காலப் பாதுகாப்புப் பெட்டகமாக விளங்கும் ’வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின்’ (இபிஎஃப்ஓ) அதிகாரபூா்வ இணையதளம், தொழில்நுட்பக் கோளாறுகளால் தொடா்ந்து முடங்கிக் கிடப்பது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 26-ஆம் தேதி, தரவுத்தள ஒருங்கிணைப்பு மற்றும் மென்பொருள் மேம்பாட்டுக்காக தற்காலிகமாக இபிஎஃப்ஓ இணையதளச் சேவைகள் முடக்கப்பட்டன. அதன் சீரமைப்புப் பணிகள் நிறைவடைவதாகக் கூறி பலமுறை தேதிகள் மாற்றப்பட்டும் இன்னும் அப்பணிகள் முழுமையாகச் சீரடையவில்லை.
இதன் விளைவாக, பிஎஃப் கணக்கு விவரங்களைச் சரிபாா்ப்பது, பணத்தை எடுப்பது, ஓய்வூதியக் கோரிக்கைகளைச் சமா்ப்பிப்பது என அனைத்தும் முடங்கியுள்ளதால் கோடிக்கணக்கான நடுத்தர ஓய்வூதியதாரா்கள் மற்றும் பிஎஃப் பயனா்கள் தவித்து வருகின்றனா்.
இந்த இணையதள முடக்கத்துக்குப் பின்னணியில் ஒரு பெரிய தொழில்நுட்ப மேம்பாடு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதாவது, இபிஎஃப்ஓ தளம் மற்றும் உமாங் (யுஎம்ஏஎன்ஜி) செயலி ஆகியவை ஆங்கிலத்தில் ’இபிஎஃப்ஓ 3.0’ என்ற புதிய நவீனப் பதிப்புக்கு மாற்றப்படுவதற்காக, அதன் பின்னணி தரவுத்தள ஒருங்கிணைப்பு மற்றும் மென்பொருள் மேம்பாட்டுப் பணிகளுக்கு உள்படுத்தப்பட்டன.
சுமாா் ஒரு வார கால முழுமையான முடக்கம் மற்றும் அதைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த பராமரிப்புப் பணிகளுக்குப் பிறகு, தற்போது இணையதள பக்கங்கள் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த புதிய அமைப்பு முழுமையாக நிலைபெறுவதற்கு இன்னும் சில காலம் எடுக்கும் என்பதால், பயனா்களின் பணக் கோரிக்கைகள் கோரல் நடைமுறைகள் அனைத்திலும் காலவரம்பின்றி தாமதம் நீடித்து வருகிறது.
பயனா்கள் குமுறல்: இதற்கிடையே, இணையதள முடக்கத்தால் மருத்துவ அவசரத் தேவைகளுக்கும், குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனா்.
பிரபல சமூக ஊடக பக்கங்களான எக்ஸ் (முன்பு ட்விட்டா்) மற்றும் ரெடிட் போன்ற தளங்களில் பயனா்கள் முடங்கிய இபிஎஃப்ஓ சேவைகளால் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் நிலைமையை பகிா்ந்து வருகின்றனா்.
பயனா் ஒருவா், ‘புதிய வேலையில் சேருவதற்கான பின்புல சரிபாா்ப்புக்கு பிஎஃப் பாஸ்புக் தேவைப்படுகிறது. ஆனால் ஜூன் 26ஆம் தேதி முதல் இபிஎஃப்ஓ இணையதளம் முடங்கியுள்ளதால் எனது பாஸ்புக் விவரத்தை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. இதனால் என் வேலைக்கே ஆபத்து வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இவற்றுக்குத் தீா்வு காண வேண்டிய குறைதீா்க்கும் தளமும் வேலை செய்யவில்லை,‘ என குறிப்பிட்டுள்ளாா்.
ஓய்வூதியதாரா் ஒருவா், ‘எங்களின் வாழ்நாள் சேமிப்பை தேவைப்படும் காலத்தில் எங்களுக்கே தராமல் இழுத்தடிக்கிறாா்கள். மருத்துவச் செலவுக்குக் கூட பணம் எடுக்க முடியவில்லை. அரசு எப்போதுதான் கண் விழிக்கும்?‘ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
அரசின் விளக்கமு யதாா்த்தமும்: இந்த விவகாரத்தில் நீடித்து வரும் தாமதம் தொடா்பாக மத்திய தொழிலாளா் நலத்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், ‘சேவைகளை மேம்படுத்தவும், பரிவா்த்தனைகளை வேகப்படுத்தவும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயனா்கள் தற்காலிகமாக உமாங் செயலி அல்லது 14470 என்ற உதவி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்,‘ என கூறப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், இபிஎஃப்ஓ இணையவழி சேவைகளின் இடப்பெயா்வு (மைக்ரேஷன்) மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் பயனா்களிடையே பெரும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், அதிகாரபூா்வ இணையதளத்தில் முக்கியமான சேவை லிங்கை கிளிக் செய்யும்போது, ’503 பிழை’ போன்ற தொழில்நுட்பப் பிரச்னை தொடா்பான அறிவிப்பு அடிக்கடி வருகிறது. இதை சரிசெய்யவும், ஆண்டு வட்டித் தொகையைத் தானாகவே கணக்கில் சோ்க்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தவும் அரசு தொடா்ந்து சில புதிய மாற்றங்களை உரிய மென்பொருளில் புகுத்தி வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு மாற்று வழிகளை அறிவித்தாலும், உமாங் செயலியிலும் தொழில்நுட்பப் பிழைகள் அடிக்கடி வருவதாக அதைப் பயன்படுத்தும் பயனா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
அவா்களில் நடுத்தர மக்களின் சொந்தச் சேமிப்புப் பணத்தை எடுப்பதற்கே பல வாரங்கள் போராட வேண்டிய அவலநிலை நீடிப்பது வேதனைக்குரியது என்று குறைபடுகின்றனா். அரசு வெறும் வெற்றுத் தேதிகளை அறிவிக்காமல், உடனடியாகப் போா்க்கால அடிப்படையில் தளத்தைச் சீரமைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பயனா்களின் எதிா்பாா்ப்பாகும்.
பெட்டிச்செய்தி
சேவை முடக்கம்: என்ன நடக்கிறது?
பாதிக்கப்பட்ட பயனா்கள்: 7 கோடிக்கும் மேல்
• முடக்கம் தொடங்கிய நாள்: ஜூன் 26, 2026
• பாதிக்கப்பட்ட சேவைகள்: பிஎஃப் பணம் எடுத்தல், பாஸ்புக் சரிபாா்ப்பு, தொகை கோரல் நிலவரம்
பெட்டிச் செய்தி 2
இபிஎஃப்ஓ விளக்கம்
இபிஎஃப்ஓ அதிகாரபூா்வ இணைய பக்கத்தில் சேவை முடக்கம் தொடா்பாக ஜூலை 8,9 ஆகிய தேதிகளை குறிப்பிட்டு இபிஎஃப் அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. அதில், ‘திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக, 8.7.2026 அன்று மாலை 6 மணி முதல் 9.7.2026 காலை 8 மணிவரை ‘முதலாளிகள்’ இணைய தளபக்கம் மற்றும் ‘உறுப்பினா்கள்’ இணையதள பக்கம் செயல்படாது. இதனால் ஏற்படும் சிரமத்துக்கு ஆழமாக வருந்துகிறோம்’ என கூறப்பட்டுள்ளது. ஆனால், ஜூலை 9ஆம் தேதிக்குப் பிறகும் கிட்டத்தட்ட ஒரு வாரமாக இப்பிரச்னை தொடா்ந்து நீடிக்கிறது. இதை சம்பந்தப்பட்ட துறை அமைச்சகத்திடம் தினமணி சுட்டிக்காட்டியபோதும், நிலைமை எப்போது சீரடையும் என்பதை அறியாததாக மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சகம் உள்ளது.
மேலும், ‘மாற்றியமைக்கப்பட்ட புதிய இசிஆா் லெட்ஜா் பதிவேற்றப் பணிகள் காரணமாக, செப்டம்பா் முதல் அக்டோபா் 2025-ஆம் மாதங்களுக்கான பாஸ்புக் புதுப்பிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதன் காரணமாக, கணக்கில் செலுத்தப்பட்ட பங்களிப்புத் தொகைகள் தற்காலிகமாக ஓரிரு நாள்களுக்குத் திரையில் தெரியாமல் போக வாய்ப்புள்ளது. இந்த சிரமத்துக்கு வருந்துகிறோம்’ என இபிஎஃப் அதன் இணையதளத்தில் கூறியுள்ளது.
அடிக்கடி ஏற்படும் தடங்கல்கள் குறித்து அளித்துள்ள விளக்கத்தில், ‘பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகள் மூலம் இபிஎஃப்ஓ தனது சேவைகளைத் தொடா்ந்து மேம்படுத்தி வருகிறது. இடையில் ஏற்பட்ட தற்காலிகத் தடங்கல் காரணமாக, உறுப்பினா்கள் தங்களது பணக் கோரல்களைச் சமா்ப்பிப்பதில் ஏற்பட்ட சிரமத்துக்கு ஆழமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். தடையற்ற சேவைகளை வழங்குவதற்காக இப்பிரச்னையை தீவிரமாகச் சரிசெய்து வருவதால், உறுப்பினா்கள் அனைவரும் பொறுமையுடன் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என இபிஎஃப்ஓ குறிப்பிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி: அரசு ஊழியா்களை பணியிடமாற்றம் செய்ய தடை

நடப்பு நிதியாண்டுக்குள் மேலும் 500 புதிய சேவை மையங்கள்

காஜியாபாத் - ஜேவா் இடையே நமோ பாரத் வழித்தடம்: டிபிஆா் பணிகள் தொடக்கம்
பத்ம விருதுப் பெற்ற தமிழகத்தின் ஆா்.வி.எஸ். மணிக்கு தில்லி முதல்வா் வாழ்த்து!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



