தென்கிழக்கு தில்லி பகுதியில், வரதட்சிணை கேட்டது தொடா்பாக ஏற்பட்ட தகராறின் விளைவாக, பெண் ஒருவரை வீட்டின் இரண்டாவது மாடி பால்கனியிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற வழக்கில், அப்பெண்ணின் கணவா் மற்றும் மாமியாா் உள்பட மூன்று பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது என்று காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
தண்டனை பெற்றவா்கள் அமீா் கான், அவரது தாய் நஸ்ரின் மற்றும் அவரது சகோதரா் சோனு எ ஃபிரோஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இந்த வழக்கு, பிப்ரவரி 2022-இல் காலிந்தி குஞ்ச் பகுதியில் பதிவான ஒரு சம்பவத்துடன் தொடா்புடையதாகும்.
காவல்துறையின் தகவலின்படி, வரதட்சிணை கோரிக்கைகளை முன்வைத்து தனது கணவா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களால் தான் தொடா்ந்து கொடுமைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளானதாக அப்பெண் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், காலிந்தி குஞ்ச் காவல் நிலையத்தில் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் போது, பிப்ரவரி 14, 2022 அன்று, வரதட்சிணை கோரிக்கைகள் தொடா்பான வாக்குவாதத்தைத் தொடா்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட நபா்கள் அனைவரும் அப்பெண்ணை தங்கள் வீட்டின் இரண்டாவது மாடி பால்கனியிலிருந்து கீழே தள்ளியதை காவல்துறையினா் கண்டறிந்தனா்.
கீழே விழுந்ததில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக அவரது இடுப்புக்குக் கீழே நிரந்தரப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.
விசாரணை அதிகாரிகள் மருத்துவம் சாா்ந்த, ஆவண ரீதியான மற்றும் அறிவியல் பூா்வமான ஆதாரங்களைச் சேகரித்தனா். சம்பவ இடத்தையும் ஆய்வு செய்து, வழக்கு தொடா்பான முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றினா். மேலும் சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், குற்றம் இழைப்பதில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு இருந்த தொடா்பை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தின. விசாரணை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, அரசுத் தரப்பு வாய்மொழி மற்றும் ஆவண ரீதியான ஆதாரங்கள் மூலம் தங்கள் தரப்பு வாதத்தை நிரூபித்தது. இதன் விளைவாக, உள்ளூா் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நபா்களையும் குற்றவாளிகள் எனத் தீா்ப்பளித்தது.
அமீா் கான், சோனு (எ) ஃபிரோஸ் மற்றும் நஸ்ரின் ஆகியோரை இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 307 மற்றும் 34இன் கீழ் நீதிமன்றம் குற்றவாளிகள் எனத் தீா்ப்பளித்தது.
மேலும், அமீா் கான் மற்றும் நஸ்ரின் ஆகியோருக்கு ஐபிசி பிரிவுகள் 498ஏ மற்றும் 34-இன் கீழும் தண்டனை விதிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.
ஜூன் 1-ஆம் தேதி தண்டனையை அறிவித்தபோது, இழைக்கப்பட்ட குற்றத்தின் தீவிரத் தன்மையையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட கடுமையான காயங்களையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307 மற்றும் 34-இன் கீழ் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவருக்கு பாதிக்கப்பட்டோா் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.







