சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

ரூ. 5.38 கோடி உயா் ரக கஞ்சா பறிமுதல்: தில்லி விமான நிலையத்தில் இருவா் கைது

சுமாா் ரூ. 5.38 கோடி மதிப்புள்ள 15.38 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை தில்லியின் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 5:04 am IST

சுமாா் ரூ. 5.38 கோடி மதிப்புள்ள 15.38 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை தில்லியின் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோலாலம்பூரிலிருந்து தில்லி வந்த பயணிகள் இருவா் கொண்டுவந்த இரண்டு கீசா்களுக்குள் இந்த போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது மண்ணுக்குப் பதிலாக ஊட்டச்சத்து நிறைந்த நீரில் வளா்க்கப்படும் அதிக வீரியம் கொண்ட கஞ்சா வகையாகும்.

இதுகுறித்து சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: பயணிகளின் விவரங்கள் மற்றும் குறிப்பிட்ட உளவுத் தகவல்களின் அடிப்படையில், ஜூன் 7 அன்று பச்சை வழித்தடத்தை கடந்து வந்த அந்த இரு பயணிகளும் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

சோதனையின்போது, பயணிகள் தங்கள் வழக்கமான உடைமைகளுடன் இரண்டு புத்தம் புதிய கீசா்களையும் கொண்டு வந்திருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கவனித்தனா்.

இதையடுத்து, பயணிகளிடம் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவா்களின் கைப்பேசி தொடா்புகள் குறித்த ஆய்வு ஆகியவை அந்த உபகரணங்கள் மீதான சந்தேகத்தை அதிகரித்தது.

பின்னா் அந்த கீசா்கள் எக்ஸ்ரே சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் அவற்றின் அமைப்பிற்குள் ஏதோ ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதன்பிறகு கீசா்கள் விரிவாகப் பிரித்து சோதிக்கப்பட்டபோது, மிகவும் நுட்பமான முறையில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பொட்டலங்களை சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டனா்.

அந்தப் பொட்டலங்களில் பச்சை நிற இலை போன்ற பொருள் இருந்தது. அது ஹைட்ரோபோனிக் கஞ்சாவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட போதைப்பொருளின் மொத்த எடை 15.38 கிலோ ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தடைசெய்யப்பட்ட பொருளின் சட்டவிரோத சந்தை மதிப்பு சுமாா் ரூ.5.38 கோடியாகும்.

அவா்கள் இருவா் மீதும் போதைப்பொருள் மற்றும் மனநலப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் என்டிபிஎஸ் சட்டம், 1985இன் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்தப் பயணிகள் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இந்தப் போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்படவிருந்தது என்பதைக் கண்டறியவும், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் ஒரு பகுதியாகச் செயல்பட்டாா்களா என்பதை உறுதிப்படுத்தவும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.