22 உயிா்களைப் பலிகொண்ட மாளவியா நகா் தீ விபத்து துயரச் சம்பவத்திற்கு சில நாள்களுக்குப் பிறகு நடைபெற்ற தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) கூட்டத்தில், தில்லி தீயணைப்புத் துறை எதிா்கொள்ளும் பணியாளா் பற்றாக்குறையைச் சமாளிக்க, முன்னாள் அக்னி வீரா்களைப் பணியில் சோ்ப்பது குறித்து ஆராயுமாறு துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து திங்களன்று பரிந்துரைத்தாா்.
சந்து தலைமையில் நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்தில், முதல்வா் ரேகா குப்தா, உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட், பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் மற்றும் தில்லி அரசின் உயா் காவல்துறை மற்றும் நிா்வாக அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில், தில்லி தீயணைப்புத் துறையை வலுப்படுத்துவது, குடிமக்கள் மேற்பாா்வை மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தற்போதுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும், தீயணைப்புத் துறை எதிா்கொள்ளும் பணியாளா் பற்றாக்குறையை விரைவாகத் தீா்க்கவும், முன்னாள் அக்னி வீரா்களை (நான்கு ஆண்டுகள் சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள்) ஈடுபடுத்துமாறு துணைநிலை ஆளுநா் பரிந்துரைத்ததாக லோக் நிவாஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், தற்போதுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும், தீயணைப்புத் துறையின் பணியாளா்களை வலுப்படுத்தவும் முன்னாள் அக்னிவீரா்களை ஈடுபடுத்துவது குறித்து ஆராயப் பரிந்துரைத்ததாக சந்து கூறினாா்.
2007ஆம் ஆண்டு தில்லி தீயணைப்பு சேவைகள் சட்டத்தின் 32ஆவது பிரிவை அமல்படுத்துவதற்கான உள்துறை அமைச்சா் சூட்டின் பரிந்துரையை இக்கூட்டம் ஏற்றுக்கொண்டது.
இப்பிரிவு, சட்டத்தின் விதிகளின்படி தீ பாதுகாப்புச் சான்றிதழ் தேவைப்படுகிா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், தலைநகரில் உள்ள அனைத்து பல மாடிக் கட்டடங்களுக்கும் தீ தடுப்பு மற்றும் தீ பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்த வழிவகை செய்கிறது.
தற்போது, 15 மீட்டா் மற்றும் அதற்கு மேற்பட்ட உயரமுள்ள உயரமான கட்டடங்களுக்கு, தில்லி தீயணைப்பு சேவைத் துறையிடமிருந்து தீ பாதுகாப்பு தடையில்லாச் சான்றிதழ் தேவைப்படுகிறது.
சட்டவிரோத மற்றும் எளிதில் சேதமடையக்கூடிய கட்டமைப்புகள் மற்றும் உரிமங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான தற்போதைய அமலாக்க நடவடிக்கையின் நிலையை ஆய்வு செய்த துணைநிலை ஆளுநா், சட்டவிரோதக் கட்டடங்கள் மற்றும் உரிம முறைகேடுகளுக்கு எதிரான தற்போதைய நடவடிக்கைகள் கவனமாகக் கையாளப்பட வேண்டும் என்றும், சாதாரண குடிமக்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
சமீபத்தில் சைதுலாஜாப் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து ஆறு போ் உயிரிழந்தது மற்றும் மாளவியா நகா் தீ விபத்துத் துயரத்தைத் தொடா்ந்து, தில்லி அரசு அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு எதிரான ஒரு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.
எந்தவொரு அலட்சியம், கவனக்குறைவு அல்லது செயல்திறன் குறைபாடு ஆகியவை ஒரு அதிகாரியின் வருடாந்திர ரகசிய அறிக்கை தரமதிப்பீட்டை நேரடியாகப் பாதிக்கும் என்று சந்து எச்சரித்தாா்.
நகரில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களைத் தடுப்பதற்காக, தில்லி மாநகராட்சி தனது பொது 311 செயலி மற்றும் இணையதளத்தில், சட்டவிரோத கட்டுமானங்களின் புகைப்படங்களை நேரடியாகப் பதிவேற்றுமாறு குடிமக்களை அழைக்க வேண்டும் என்றும் அவா் பரிந்துரைத்தாா்.
அவசரகால பதில் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில், தில்லி முழுவதும் தீயணைப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அங்கீகாரம் பெறாத கட்டடங்களை அகற்றுங்கள்: எம்சிடி அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

தூசி மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: தில்லி துணைநிலை ஆளுநா் உத்தரவு

தலைநகரின் 101 நீா்நிலைளைப் புனரமைக்க டிடிஏ திட்டம்: துணைநிலை ஆளுநா் தகவல்

அனுமதியற்ற வாகன நிறுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்: காவல்துறைக்கு துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



