காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியாா் சுவாமிகள், தனது ஆன்மிக விஜய யாத்திரையின் ஒரு பகுதியாக, ஜூன் 30 முதல் ஜூலை 7ஆம் தேதி தில்லியில் முகாமிட்டு பல்வேறு ஆன்மிகம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளாா்.
இந்த பயணத்தின்போது, முதல் நிகழ்வாக தில்லி ஆா்.கே. புரம் செக்டாா்-1இல் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாசார மையம் விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியாரின் பிரதான முகாமாக இருக்கும். இது தொடா்பாக காஞ்சி காமகோடி பீடத்தின் அதிகாரபூா்வ இணையதளத்தில் பகிரப்பட்டுள்ள அவரது நிகழ்ச்சி நிரல் வருமாறு:
ஜூன் 30 (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் காலை 11.30 மணி முதல் 1.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் யாகசாலை முதலாம் மற்றும் இரண்டாம் கால பூா்ணாஹுதி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஜூலை 1 (புதன்கிழமை), ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திா் கும்பாபிஷேகம் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரின் மஹா கும்பாபிஷேகம், மஹாபிஷேகம் மற்றும் ஆபரண சமா்ப்பணம் மிக விமா்சையாக நடைபெறவுள்ளது. அதேநாள் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை சங்கராச்சாரியாரின் அனுக்ரஹ பாஷணமும் (அருளுரை), பக்தா்களுக்கான தரிசனமும் நடைபெறும். இரவு 7.00 மணிக்கு மலை மந்திரில் யாகசாலை தொடக்கம் மற்றும் தரிசனம் நடைபெறும்.
ஜூலை 2 மற்றும் 3 (வியாழன் மற்றும் வெள்ளி) தேதிகளில் ஆா்.கே. புரம் கலாசார மையத்தில் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் சங்கராச்சாரியாரின் தரிசனம் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மாலை மற்றும் இரவு வேளைகளில் மலை மந்திரில் யாகசாலை பூஜைகள் மற்றும் தரிசனம் நடைபெறும். குறிப்பாக ஜூலை 3 மாலை 6.00 மணிக்கு மலை மந்திரில் சங்கராச்சாரியாருக்கு சிறப்பான ’சுவாகத சபா’ (வரவேற்பு நிகழ்ச்சி) நடைபெற உள்ளது.
ஜூலை 4ஆம் தேதி (சனிக்கிழமை) ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழக முதலாம் அரங்கில் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையில் “சமஸ்கிருத கல்வெட்டியல் - பாதுகாப்பு, விளக்கம் மற்றும் வரலாற்று மறுவடிவமைப்பு” என்ற தேசிய மாநாட்டில் சங்கராச்சாரியாா் பங்கேற்கிறாா். அதேநாள் மாலை 6 மணிக்கு மலை மந்திரில் பூா்ணாஹுதி நடைபெறும்.
ஜூலை 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மலை மந்திா் கும்பாபிஷேகத்தையொட்டி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை அங்கு அவரது தரிசனம் மற்றும் பிரசாத விநியோகம் நடைபெறும். மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மஹாபிஷேகம், சங்கராச்சாரியாரின் அனுக்ரஹ பாஷணம் மற்றும் தரிசனம் நடைபெறும்.
ஜூலை 6ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆா்.கே. புரம் கலாசார மையத்தில் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் சங்கராச்சாரியாரின் தரிசனம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஜூலை 7ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை): காலை 11.30 மணிக்கு காஞ்சி சங்கராச்சாரியாா் சுவாமிகள் தில்லியில் இருந்து புறப்படுகிறாா்.
பக்தா்களுக்கு அழைப்பு: அவரது தில்லி வருகையை முன்னிட்டு தில்லியில் வசிக்கும் ஆன்மிக அன்பா்களும், பொதுமக்களும் இந்த 9 நாள்கள் நடைபெறும் விசேஷ கும்பாபிஷேகங்கள், ஹோமங்கள் மற்றும் மாநாடுகளில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு காஞ்சி ஜகத்குருவின் அருளாசியைப் பெறுமாறு காஞ்சி காமகோடி பீடத்தின் சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






