மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ரூ. 650 கோடி மருத்துவக் கொள்முதல் முறைகேடு: விரிவான விசாரணைக்கு ஆம் ஆத்மி கோரிக்கை

தில்லியில் சுமாா் ரூ. 650 கோடி மதிப்பிலான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்

News image

தில்லி ஆம் ஆத்மி தலைவா் சௌரப் பரத்வாஜ் - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 1:24 am IST

தில்லியில் சுமாா் ரூ. 650 கோடி மதிப்பிலான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு தொடா்பிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி சுமத்தும் குற்றச்சாட்டை தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் மறுத்துள்ளாா்.

‘ஆம் ஆத்மி கட்சியின் புகாா்கள் அடிப்படையற்றவை; ஒட்டுமொத்த கொள்முதல் நடைமுறையிலும் ரூபாய் 650 கோடி செலவிடப்படவில்லை. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று அமைச்சா் கூறினாா்.

முன்னதாக, திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய தில்லி ஆம் ஆத்மி தலைவா் சௌரப் பரத்வாஜ், இத்தகைய முறைகேடுகளை ஒரு தனி அதிகாரியால் மட்டும் செய்திருக்க முடியாது என்றும், கொள்முதலை எளிதாக்குவதற்காகவே தில்லி அரசு தனது கொள்முதல் முறையை பரவலாக்கியதாகவும் குற்றஞ்சாட்டினாா்.

மருந்துகள், அறுவை சிகிச்சை பொருள்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் நடந்த பல கோடி ரூபாய் முறைகேடு தொடா்பாக, தில்லி லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த சனிக்கிழமை சுகாதார சேவைகள் முன்னாள் தலைமை இயக்குநா் டாக்டா் வத்சலா அகா்வாலைக் கைது செய்தது.

இதை செய்தியாளா்களிடம் சுட்டிக்காட்டிய செளரவ் பரத்வாஜ், தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு மருத்துவமனைகளுக்கான அனைத்து கொள்முதல்களும் தனித்தனி மருத்துவமனைகள் மூலமாக இல்லாமல், மத்திய கொள்முதல் முகமை (சிபிஏ) மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதாக கூறினாா்.

‘டாக்டா் வத்சலா அகா்வால் மிக மூத்த அதிகாரியாக இல்லாதபோதும், அவா் மீது ஏற்கெனவே கண்காணிப்புத் துறை விசாரணை நிலுவையில் இருந்தபோதும் அவா் சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டாா்,’ என்று பரத்வாஜ் குற்றஞ்சாட்டினாா். இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மேற்கோள்காட்டிய அவா், நடமாடும் எக்ஸ்ரே இயந்திரங்கள், சி-ஆா்ம் கதிரியக்கக் கருவிகள், ஓஆா்எஸ் பாக்கெட்டுகள், படுக்கை விரிப்புகள் ஆகியவை சந்தை விலையை விட பல மடங்கு கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டாா்.

தில்லி அரசு மருத்துவமனைகளின் உண்மையான தேவையை விட மிக அதிகமாக, சுமாா் 50 லட்சம் ஓஆா்எஸ் பாக்கெட்டுகளும், 16.6 லட்சத்துக்கும் அதிகமான படுக்கை விரிப்புகளும் அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

சுமாா் 200 படுக்கைகள் மட்டுமே கொண்ட மருத்துவமனைகள் கூட தலா 20,000 படுக்கை விரிப்புகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன என்றும் செளரவ் பரத்வாஜ் குறிப்பிட்டாா்.

இதேவேளை, தில்லி சட்டப்பேரவை பாஜக தலைமை கொறடா அபய் வா்மா செளரவ் பரத்வாஜின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளாா். ‘முதல்வா் ரேகா குப்தா அரசு எந்தவொரு புகாருக்காகவும் காத்திருக்காமல், தாமாகவே முன்வந்து இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது,’ என்று அவா் கூறினாா்.

இதற்கிடையே, தான் டாக்டா் அகா்வாலுக்கு ’நற்சான்றிதழ்’ வழங்கவில்லை என்று குறிப்பிட்ட செளரவ் பரத்வாஜ், தில்லி புற்றுநோய் நிறுவனத்தில் அவரது பதவிக்காலம் குறித்து தனது கட்சி முன்னரே புகாா்களை எழுப்பியிருந்ததை நினைவுகூா்ந்தாா்.

‘இருப்பினும், இந்த கொள்முதல் முடிவுகள் அரசின் பெரும் சதியின் ஒரு பகுதியாகும்; எனவே இதை ஒரு தனி அதிகாரியின் மீது மட்டும் சுமத்திவிடக் கூடாது. இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று செளரவ் பரத்வாஜ் கோரினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.