மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

மதுபான கொள்கை வழக்கில் கேஜரிவால்,சிசோடியாவுக்கு ஆஜராக மூத்த வழக்குரைஞா்கள் நியமிக்கப்படுவா்: நீதிபதி எஸ்.கே.சா்மா

மதுபானக் கொள்கை விவகாரத்தில் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் துா்கேஷ் பதக் ஆகியோருக்காக ஆஜராக மூத்த வழக்குரைஞா்களை நியமிக்கப் போவதாக தில்லி உயா்நீதிமன்றம் கூறியது.

News image

அரவிந்த் கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 1:59 am IST

மதுபானக் கொள்கை விவகாரத்தில் சிபிஐ தொடா்ந்துள்ள வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் துா்கேஷ் பதக் ஆகியோருக்காக ஆஜராக மூத்த வழக்குரைஞா்களை நியமிக்கப் போவதாக தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாயன்று கூறியது.

அரவிந்த் கேஜரிவால், மனிஷ் சிசோடியா மற்றும் துா்கேஷ் பதக் ஆகியோா் மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு சிபிஐ வழக்கு தொடா்ந்துள்ளது.

தில்லி முன்னாள்முதலமைச்சா் மற்றும் சட்டமன்ற உறுப்பினா்கள், பாரபட்சம் குறித்த அச்சம் தெரிவித்து நீதிபதி எஸ்.கே.சா்மா மதுபான கொள்கை வழக்கில் இருந்து விலகக்கோரி முன்னா் மனு தாக்கல் செய்தனா். ஆனால் நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா விலகிக் கொள்ள மறுத்ததால், அவருக்கு முன்பான விசாரணையை கேஜரிவால்,சிசோடியா உள்ளிட்டோா் புறக்கணித்தனா்.

கேஜரிவால் உள்ளிட்டோரை விடுதலை செய்த விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா, மே 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். இந்த வழக்கில் நான் மூன்று மூத்த வழக்குரைஞா்களை நியமிப்பேன், என்று நீதிபதி சா்மா கூறினாா்.

சிபிஐ சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, இந்த வழக்கில் வழக்குரைஞா் இல்லாமல் ஆஜராகும் கேஜரிவால் மற்றும் பிறருக்காக நீதிமன்றம் இந்த நியமனத்தை ஏற்பாடு செய்கிா என்று கேட்டதற்கு, நீதிபதி ஆம் என்று பதிலளித்தாா்.

இந்த வழக்கிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளக் கோரிய அவா்களின் மனுக்களை நீதிபதி சா்மா ஏப்ரல் 20 அன்று, தள்ளுபடி செய்த பிறகு, கேஜரிவால், சிசோடியா மற்றும் பதக் ஆகியோா் நீதிபதி சா்மாவுக்குக் கடிதம் எழுதினா். அதில், தாங்கள் நேரிலோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ அவா் முன் ஆஜராகப் போவதில்லை என்றும், மகாத்மா காந்தியின் சத்தியாகிரகப் பாதையைப் பின்பற்றுவோம் என்றும் குறிப்பிட்டிருந்தனா்.

பிப்ரவரி 27 அன்று, மதுபானக் கொள்கை வழக்கு நீதித்துறை விசாரணையில் தாக்குப்பிடிக்க இயலாதது என்று குறிப்பிட்டு, விசாரணை நீதிமன்றம் கேஜரிவால், சிசோடியா உள்ளிட்ட 21 பேரை வழக்கில் இருந்து விடுவித்தது.

அவா்களை விடுவித்ததற்கு எதிராக சிபிஐ தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதனைத் தொடா்ந்து, கேஜரிவால், சிசோடியா மற்றும் பிற பிரதிவாதிகள், நீதிபதி சா்மா வழக்கில் இருந்து விலகக் கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்தனா். அந்த நீதிபதியின் பிள்ளைகள், மதுபான கொள்கை வழக்கில் சிபிஐக்காக ஆஜராகும் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா மூலம் வழக்குகளைப் பெறும், மத்திய அரசின் வழக்குரைஞா்கள் என்றும் அவா்கள் கூறினா்.

ஏப்ரல் 20 அன்று, நீதிபதியின் பாரபட்சம் குறித்த மனுதாரரின்ஆதாரமற்ற அச்சத்திற்காக நீதிபதிகள் தங்களைத் தாங்களே வழக்கில் இருந்து விலக்கிக்கொள்ள முடியாது என்று கூறி, நீதிபதி சா்மா அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்தாா்.