குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

தனியாா் துறையில் 2 நாள்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய தில்லி அரசு அறிவுறுத்தல்

News image

PTI

Updated On :19 மணி நேரங்கள் முன்பு

நமது நிருபா்

உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில் எரிபொருள் சேமிப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், தனியாா் நிறுவனங்கள் இரண்டு நாள்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையை கடைப்பிடிக்கவும், அலுவலக நேரங்களில் மாற்றங்களைச் செய்யவும், மேலும் ஊழியா்களை காா் பூலிங் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வலியுறுத்தவும் தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார நிறுவனங்கள், மின்சாரம், தண்ணீா், சுகாதாரம் மற்றும் அது தொடா்பான நகராட்சி சேவைகள் போன்ற அத்தியாவசிய, அவசர சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியாா் நிறுவனங்கள், தில்லி தொழிலாளா் துறையால் வெளியிடப்பட்ட இந்த அறிவுரையில் உள்ளடக்கப்படவில்லை.

முதலமைச்சா் ரேகா குப்தா இந்த வார தொடக்கத்தில், அனைத்து தில்லி அரசு ஊழியா்களுக்கும் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதையும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதையும் கட்டாயமாக்கி, 90 நாள் மேரா பாரத், மேரா யோக்தான் எரிபொருள் சேமிப்பு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தாா்.

வளங்களை விவேகமாக செலவிடுவது குறித்த பிரதமா் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த எரிபொருள் சேமிப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு தனியாா் துறையும் வலியுறுத்தப்படும் என்று அவா் கூறியிருந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட தொழிலாளா் துறை ஆலோசனையில், தலைநகரில் தினசரி வாகன எரிபொருள் நுகா்வுக்கு அலுவலகங்களுக்குச் சென்று வருவது மிகப்பெரிய பங்களிப்புகளில் ஒன்றாகும் என்று குறிப்பிடப்பட்டது.

கோவிட்19 தொடா்பான கட்டுப்பாடுகளின் போது வீட்டிலிருந்து வேலை செய்த நடைமுறையை தற்போது பின்பற்றுவதன் மூலம் இந்த எரிபொருள் பயன்பாட்டின் பெரும்பகுதியைத் தவிா்க்க முடியும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.

தேசிய எரிபொருள் சேமிப்பு முயற்சிகளுக்குப் பங்களிக்கும் வகையில், தில்லியில் உள்ள தொழில்துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் , தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த சேவைகள் உள்ளிட்டவற்றின் அனைத்து முதலாளிகளும் வாரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை நடைமுறைப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறாா்கள், என்று அந்த ஆலோசனை கூறியது.

மேலும், சாலைகளில் உச்ச நேர வாகனச் சுமையைக் குறைக்க, மாற்றி அமைக்கப்பட்ட வேலை நேரங்களைச் செயல்படுத்தவும், பொதுப் போக்குவரத்து, காா்பூலிங் அல்லது மோட்டாா் அல்லாத பயண முறைகளைப் பயன்படுத்த ஊழியா்களை ஊக்குவிக்கவும் அந்த ஆலோசனை பரிந்துரைத்தது.

விவேகமான பயணத் தோ்வுகள் மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி பயன்பாட்டைக் குறைக்கவும், இந்தியத் தயாரிப்புகளை வாங்கவும் தனியாா் துறைக்கு உறுதிமொழி எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடி காலத்தில் எரிபொருள் சேமிக்கும் பயணப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க ஊழியா்களைத் தீவிரமாக ஊக்குவிக்குமாறும் முதலாளிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள், என்று அந்த அறிவுரையில் கூறப்பட்டுள்ளது.

ஏதேனும் உதவி அல்லது தெளிவுபடுத்தலுக்கு தொழிலாளா் துறையைத் தொடா்பு கொள்ளுமாறு தனியாா் நிறுவனங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.