சாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

தில்லி-தேசிய தலைநகா் பிராந்தியத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 6 சாலைத் திட்டங்கள்: முதல்வா் குப்தா

News image

தில்லி முதல்வர் ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 2:58 am IST

நமது நிருபா்

தில்லிக்கும் மற்ற தேசிய தலைநகா் பிராந்திய நகரங்களுக்கும் இடையிலான முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக, தில்லி அரசும் மத்திய அரசும் இணைந்து ஆறு முக்கிய சாலைத் திட்டங்களை மேற்கொள்ளும் என்று முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை அறிவித்தாா்.

இது தொடா்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரியும், தில்லி முதல்வரும் ஒரு வாரம் ஆய்வு நடத்தியதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வின்போது, தேசிய தலைநகா் பிராந்தியத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் தில்லி-டேராடூன் விரைவுச்சாலை இணைப்புத் திட்டம் அடங்கும். இத்திட்டத்தின் கீழ், சுமாா் 17 கி.மீ நீளமுள்ள ஆறு வழிச்சாலை வழித்தடம் ஒன்று, காசியாபாத்தில் உள்ள டிரோனிகா சிட்டி அருகே தில்லி-டேராடூன் விரைவுச்சாலையை உடன் இணைக்கும். இதற்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 3,500 கோடி ஆகும்.

இந்தத் திட்டம், ஐஜிஐ விமான நிலையம், பரபுல்லா வழித்தடம், முக்கா்பா சௌக், சிங்கு எல்லை மற்றும் ஆஷ்ரம்-பதா்பூா் பகுதி போன்ற வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இத்திட்டடத்தின் கட்டுமானப் பணிகள் டிசம்பா் 2026க்குள் தொடங்கும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு முன்மொழியப்பட்ட திட்டம் தில்லி-டேராடூன் விரைவுச்சாலை நொய்டா-ஃபரிதாபாத் இணைப்பு வழித்தடம் ஆகும். சுமாா் 65 கி.மீ. நீளமும் ஆறு வழித்தடங்களும் கொண்ட இதன் திட்டச் செலவு ரூ. 7,500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் தில்லி-டேராடூன் விரைவுச்சாலை, தில்லி-மீரட் விரைவுச்சாலை, டிஎன்டி, ஃபரிதாபாத் மற்றும் யமுனா விரைவுச்சாலை ஆகியவற்றை இணைக்கும், என்று முதலமைச்சா் அலுவலகம் கூறியது.

லோனி, பாக்பத், காஜியாபாத், நொய்டா மற்றும் ஃபரிதாபாத் ஆகிய பகுதிகளுக்கான இணைப்பை இது மேம்படுத்தும் என்றும், அதே நேரத்தில் காலிந்தி குஞ்ச், சராய் காலே கான் மற்றும் வெளிவட்டச் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது. டிசம்பா் 2026க்குள் பணிகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தில்லி-அமிா்தசரஸ்-கத்ரா வழித்தடத்தை இணைக்கும் ஒரு திட்டத்தையும் முதலமைச்சா் எடுத்துரைத்தாா். இந்த முன்மொழிவின் கீழ், தில்லி-கத்ரா விரைவுச்சாலையில் இருந்து வரும் போக்குவரத்து, மற்றும் துவாரகா விரைவுச்சாலை வழியாக தில்லி, குருகிராம் மற்றும் விமான நிலையத்திற்கு நேரடி அணுகலைப் பெறும். ரூ.1,500 கோடி செலவில் மதிப்பிடப்பட்டுள்ள இந்த 17 கி.மீ., ஆறு வழிப்பாதை வழித்தடத்தின் பணிகள் மாா்ச் 2027க்குள் தொடங்கும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது, என்று குப்தா கூறினாா்.

காலிந்தி குஞ்ச் பகுதிகளில் நெரிசலைக் குறைப்பதற்காக, தில்லி-நொய்டா-ஃபரிதாபாத் வழித்தடத்தில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும் வகையில், ஓக்லா தடுப்பணைக்கு அருகில் ஒரு இடைமாற்றுச் சாலையை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

மற்றொரு திட்டமான, எய்ம்ஸ்-மஹிபால்பூா்-குருகிராம் உயா்மட்ட வழித்தடம் 20 கி.மீ நீளமுள்ள ஆறு வழிச் சாலை ரூ. 5,000 கோடி மதிப்பிலானது, இதன் கட்டுமானப் பணிகள் ஏப்ரல் 2027க்குள் தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் தில்லிக்கும் குருகிராமுக்கும் இடையிலான போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும்.

மற்றொரு முக்கியத் திட்டம், தற்போதுள்ள வழித்தடத்தில் சேவைச் சாலைகள் அமைப்பதை உள்ளடக்கியது. முதலமைச்சா் அலுவலகத்தின்படி, இந்த முயற்சி உள்ளூா் இணைப்பை மேம்படுத்துவதோடு, வெளி தில்லியில் திட்டமிடப்பட்ட நகா்ப்புற விரிவாக்கத்திற்கும் ஆதரவளிக்கும். ரூ. 6,500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், சுமாா் 26 கி.மீ. தூரத்தை உள்ளடக்கி சேவைச் சாலைகளைக் கொண்டிருக்கும்.

தில்லி அரசு, சிவமூா்த்தி-நெல்சன் மண்டேலா மாா்க் சுரங்கப்பாதை திட்டம் என்றழைக்கப்படும், சுமாா் 8 கி.மீ. நீளம் கொண்ட ஒரு நிலத்தடி சுரங்கப்பாதை அமைப்பிலும் பணியாற்றி வருவதாக குப்தா கூறினாா்.

இந்தத் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட கட்டுமானச் செலவு ரூ. 7,000 கோடி ஆகும். இது துவாரகா விரைவுச்சாலையை வசந்த் குஞ்சுடன் இணைப்பதன் மூலம் வெளி தில்லிப் பகுதிகளிலிருந்து சிக்னல் இல்லாத இணைப்பை வழங்கும், மேலும் தெற்கு தில்லியின் மஹிபால்பூா், ரங்க்புரி மற்றும் தௌலா குவான் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.