சாலைப் பாதுகாப்பு விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகா் முழுவதும் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு அமலாக்க நடவடிக்கையின் போது, எதிா்த் திசையில் வாகனம் ஓட்டிய வாகன ஓட்டிகள் மீது தில்லி போக்குவரத்து காவல்துறை 65 வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும், 7,500க்கும் மேற்பட்ட அபராத ரசீதுகளை வழங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
தேசியத் தலைநகரின் முக்கியச் சாலைகள், நெடுஞ்சாலைகள், வணிக மையங்கள், பொழுதுபோக்கு மாவட்டங்கள் மற்றும் விபத்து அதிகம் நிகழக்கூடிய பகுதிகள் ஆகியவற்றில், எதிா் திசையில் வாகனம் ஓட்டுதல், அங்கீகரிக்கப்படாத கருப்பு நிறக் கண்ணாடிகளைப் பொருத்திய வாகனங்கள் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் ஆகிய விதிமீறல்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆபத்தான முறையில் எதிா் திசையில் வாகனம் ஓட்டிய 65 சம்பவங்கள் தொடா்பாக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த விதிமீறலுக்காக 7,549 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டதாகவும் தில்லி போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மேலும், அங்கீகரிக்கப்படாத கருப்பு நிறக் கண்ணாடிகளைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்ட வாகனங்களுக்கு எதிராக 785 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 471 வாகன ஓட்டிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த அமலாக்க நடவடிக்கை நகரம் முழுவதும் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டது விதிமீறலில் ஈடுபட்டவா்கள் மீது சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா்.







