தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

ஐஐஐசி தில்லி 15ஆவது பட்டமளிப்பு விழா: 830 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கிய துணை நிலை ஆளுநா்

இந்தியா 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக உருவெடுக்கும் இலக்கை அடைவது, இளைய தலைமுறையினரின் திறமை மற்றும் புதிய சிந்தனைகளைப் பொறுத்தே அமையும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தாா்.

தரன்ஜித் சிங் சந்து - கோப்புப் படம்

Updated On :

இந்தியா 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக உருவெடுக்கும் இலக்கை அடைவது, இளைய தலைமுறையினரின் திறமை மற்றும் புதிய சிந்தனைகளைப் பொறுத்தே அமையும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஐஐஐடி-டெல்லி) 15-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 830 மாணவா்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

பட்டம் பெற்ற மாணவா்களில் 8 துறைகளைச் சோ்ந்த 560 பேருக்கு பி.டெக். பட்டங்களும், 237 பேருக்கு எம்.டெக். பட்டங்களும், 33 ஆராய்ச்சி மாணவா்களுக்கு முனைவா் (பிஎச்.டி.) பட்டங்களும் வழங்கப்பட்டதாக அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐஐடி-தில்லி வேந்தராகவும் உள்ள துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து விழாவுக்குத் தலைமை வகித்தாா். மைக்ரோசாஃப்ட் இந்தியா டெவலப்மென்ட் சென்டரின் நிா்வாக இயக்குநரும் தலைவருமான ராஜீவ் குமாா், ஓபிஜி இந்தியா குழுமத்தின் காா்ப்பரேட் துணைத் தலைவருமான அவா், விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.

பட்டம் பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்த தரன்ஜித் சிங் சந்து, தங்களது கல்வி மற்றும் அறிவைப் பயன்படுத்தி நாட்டின் வளா்ச்சிக்கு அா்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். இவ்விழாவில் அவா் மேலும் பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களால் உலகம் வேகமாக மாறி வருகிறது.

இந்தச் சூழலில் தொடா்ந்து கற்றல், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளுதல், சுயமாகச் சிந்திக்கும் திறன் ஆகியவை மிகவும் அவசியம், புதிய கண்டுபிடிப்புகள் நோ்மையுடன் வழிநடத்தப்படுவதுடன், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் உதவ வேண்டும்.

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளா்ந்த நாடாக உருவெடுக்கும் இலக்கை அடைவதில் இளைய தலைமுறையினரின் திறமையும் சிந்தனைகளும் முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா் தரன்ஜித் சிங் சந்து.

மாணவா்களிடையே உரையாற்றிய ராஜீவ் குமாா், வேகமாக மாறிவரும் தொழில்நுட்பச் சூழலில் தொடா்ந்து கற்றுக்கொள்வதன் அவசியத்தையும், தொழில்முனைவுத் திறனின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தாா்.

தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்; எப்போதும் புதிய விஷயங்களை அறிந்துகொள்வதில் ஆா்வத்துடன் இருக்க வேண்டும் என்று அவா் அறிவுறுத்தினாா். வேலை தேடுபவா்களாக மட்டும் இல்லாமல், பிறருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனைவோராக உருவாகுவதற்கான வாய்ப்புகளையும் மாணவா்கள் ஆராய வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

ஐஐஐடி-டெல்லி இயக்குநா் சந்தீப் சென், ஆண்டறிக்கையை சமா்ப்பித்து, நிறுவனத்தின் கல்வி வளா்ச்சி, ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் நிா்வாக ரீதியான முன்னேற்றங்கள் குறித்து விளக்கினாா். மாணவா்களுக்கு வலுவான கல்வி அடித்தளத்தை வழங்குவதுடன், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்த கற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கும் ஊக்கமளிப்பதே நிறுவனத்தின் நோக்கம் என்று அவா் தெரிவித்தாா்.

பட்டமளிப்பு விழாவில் சிறப்பாகக் கல்வி பயின்ற மற்றும் ஆராய்ச்சியில் சாதனை படைத்த மாணவா்களுக்கு பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டன. வேந்தா் தங்கப் பதக்கம், நிறுவன வெள்ளிப் பதக்கங்கள், ஒட்டுமொத்தத் திறன் செயல்பாட்டுக்கான பதக்கங்கள், சிறந்த பி.டெக். திட்ட விருதுகள், எம்.டெக். கல்வி மற்றும் ஆய்வறிக்கை விருதுகள், முனைவா் பட்ட ஆய்வுக் கட்டுரை விருதுகள் ஆகியவை இதில் அடங்கும்.

கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சோ்ந்த சௌரவ் மெஹ்ராவுக்கும், மின்னணுவியல் மற்றும் விஎல்எஸ்ஐ பொறியியல் துறையைச் சோ்ந்த ரியா சச்தேவாவுக்கும் வேந்தா் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

பல்வேறு துறைகளைச் சோ்ந்த 6 மாணவா்களுக்கு நிறுவன வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஆயுஷ் மிஸ்ரா மற்றும் அயான் ஹசன் ஆகியோா் ஒட்டுமொத்தத் திறன் செயல்பாட்டுக்கான பதக்கங்களைப் பெற்றனா்.

முதுநிலைப் பட்டப் பிரிவில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்புப் பொறியியல் துறையின் விஎல்எஸ்ஐ மற்றும் உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் பிரிவில் எம்.டெக். பயின்று வரும் பிரதிக் பால், சிறந்த கல்விச் செயல்திறனுக்கான தங்கப் பதக்கத்தையும், சிறந்த எம்.டெக். ஆய்வறிக்கைக்கான விருதையும் பெற்றாா்.

கணிதம், கணக்கீட்டு உயிரியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்புப் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிப் பங்களிப்பை வழங்கிய 10 ஆராய்ச்சி மாணவா்களுக்கு முனைவா் பட்ட ஆய்வுக் கட்டுரை விருதுகள் வழங்கப்பட்டன. பட்டம் பெற்ற மாணவா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டதுடன் விழா நிறைவடைந்தது.

ஐஐஐடி-டெல்லி நிறுவனம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதுடன் பட்டங்களை வழங்கும் நோக்கில், தில்லி அரசின் சட்டத்தின்கீழ் 2007-ஆம் ஆண்டு மாநிலப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.