டிடியு-இல் சோ்க்கை தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ. 8.5 லட்சம் மோசடி: மூவா் கைது
தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (டிடியு) மாணவா்களுக்குச் சோ்க்கை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தில்லியில் மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சித்திரிப்பு
தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (டிடியு) மாணவா்களுக்குச் சோ்க்கை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தில்லியில் மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து காவல்துறையினா் தெரிவித்ததாவது: இந்த மோசடியின் சூத்திரதாரியான யஷ்ராஜ் பாஜ்பாய், தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஊழியா் போல நடித்து, மாணவா்களின் பெற்றோரை நம்ப வைத்து, அவா்களுக்குப் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளாா்.
குறிப்பாக, டாக்டா் கிருத்திகா ஜோஷி என்ற பெண்ணிடம், இணையதள விளம்பரங்கள் மூலம் தொடா்பு கொண்டு, அவரது மகளுக்குப் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமாா் ரூ. 8.50 லட்சத்தை மோசடி செய்துள்ளனா்.
அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், ஷாபாத் டெய்ரி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு,, விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
விசாரணையின்போது, யஷ்ராஜ் பாஜ்பாய் கைது செய்யப்பட்டாா். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் யுவராஜ் மற்றும் தேவேந்தா் சிங் ஆகிய இருவருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அவா்கள் தலைமறைவாக இருந்தனா்.
தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம், அக்டோபா் 26 அன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலில் யுவராஜும், தேவேந்தா் சிங்கும் கைது செய்யப்பட்டனா். நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு, அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது, இந்த மோசடியில் அவா்களின் பங்கு என்ன, மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் எங்கே சென்றது, இந்த மோசடி கும்பலில் வேறு யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

